ஜெ4 ஸ்டுடியோ எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெப ஜோன்ஸ் தயாரிப்பில் ஜெ. சுரேஷ் இயக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர். ஜு கீப்பர்’ திரைப்படம் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் உண்மையான மிருகத்தை (புலி) கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்காக தாய்லாந்து சென்று அங்குள்ள புலியுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த புகழ், “வனவிலங்குகள் அதுவும் புலிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை அணுகிய போது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் புலியுடன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை தாய்லாந்து சென்ற பின்னர் தான் உணர்ந்தேன். புலி எப்போது என்ன மூடில் இருக்கும் என்பது தெரியாது. போதிய பயிற்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு மகிழ்ச்சியோடு நடைபெற்றது,” என்று அவர் கூறினார்.
திரைப்படம் பற்றி பேசிய அவர், “மலைப்பகுதியில் வசிக்கும் மிகவும் அப்பாவியான ஒரு மனிதன் பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை எடுத்து வளர்க்கிறான். இதனால் அவன் சந்திக்கும் சவால்கள் என்ன, அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது குறித்தும் காடுகளை பாதுகாப்பது பற்றியும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கலந்து குழந்தைகள் கொண்டாடும் வகையில் இப்படம் திரையில் வழங்கும்,” என்றார்.
நாயகி ஷிரின் காஞ்ச்வாலா (சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ கதாநாயகி) கூறுகையில், “இது வரை நான் நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது. முதல் முறையாக கிராமத்து பெண்ணாக ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ திரைப்படத்தில் நடித்துள்ளேன். நடிப்பதற்கான வாய்ப்பு இதில் மிகவும் அதிகம். எனவே எனது திரை பயணத்தில் இது ஒரு முக்கியமான படம்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ். ராஜரத்தினம் கூறுகையில், “தேவர் பிலிம்ஸ் மற்றும் ராமநாராயணன் ஆகியோருக்கு பிறகு தமிழில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நிஜ விலங்கை (புலி) வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் உதவியுடன் இந்த கதையை செய்ய முடியும் என்றாலும் உண்மையான அனுபவத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பதற்காக பெரும் பொருட்செலவில், ஏராளமான விதிமுறைகளை பின்பற்றி இப்படத்தை தயாரித்துள்ளோம். படமும் மிகவும் நன்றாக உருவாகி, டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு சிறப்பான இசையை தந்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி,” என்று கூறினார்.
400க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கி இத்துறையில் முன்னணியில் இருக்கும் இயக்குநர் ஜெ. சுரேஷ், மம்மூட்டி, மாதவன், சினேகா மற்றும் விக்னேஷ் நடித்த திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் பர்மிய மொழி படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
சிங்கம் புலி மற்றும் மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ திரைப்படத்தில் விஜய் சீயோன் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். கங்கை அமரன் மற்றும் சினேகன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தன்வீர் மொய்தீன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். கே எஸ். அசீப் படத்தொகுப்பையும் கல்விளை சாமுவேல் ராஜன் கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர். பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் தாய் (Thai) மொழியில் ‘நாய் சாவ்ன் சத்வ்’ என்ற பெயரிலும் மலாய் மொழியில் ‘என்சிக் பென்ஜகா ஜு’ என்ற தலைப்பிலும் டப்பிங் செய்து இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.