மம்முட்டியின் ‘பிரமயுகம்’ வரும் பிப்ரவரி 15 -ல் வெளியாகிறது!.

நடிகர் மம்முட்டி ‘நடிப்பில், நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், ‘பிரமயுகம்’. இப்படத்தை, ‘பூதகாலம்’ ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது.இப்படத்தின் டிரெய்லர் அபுதாபியில் மம்முட்டி மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. படத்தின் சுவாரஸ்யத்தை பாதிக்காமல் இதில் உள்ள த்ரில்லிங் காட்சிகள், மாய கூறுகள், சிறந்த தொழில்நுட்ப நுணுக்கம் போன்றவற்றைச் சிறப்பாகக் கொடுத்துள்ளதாகப் படக்குழு உறுதியளிக்கிறது. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக முதலில் மலையாளத்தில் மட்டுமே வெளியாகிறது.

‘பிரமயுகம்’ படத்தின் டப்பிங் வெர்ஷனின் வெளியீட்டு தேதி விரைவில் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர். மாயம், மாந்திரீகம் போன்ற விஷயங்கள் நிறைந்த ஒரு சகாப்தத்தில் கேரளாவில் கதை விரிவடைகிறது. அங்கு ஒரு நாட்டுப்புறப் பாடகர் அடிமைச் சந்தையில் இருந்து தப்பித்து மர்மமான ஒரு மாளிகையில் சிக்குகிறார். படத்தை முழுவதுமாக கருப்பு மற்றும் வெள்ளையில் மட்டுமே படமாக்கி வெளியிடுதல் என்ற துணிச்சலான, ஆக்கப்பூர்வமான முடிவை படக்குழ்வினர் எடுத்துள்ளனர்