25 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் பிரபுதேவா- ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி!
தமிழ்த்திரையுலகில் கடந்த 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தை தொடர்ந்து,கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு,நடனப்புயல் பிரபு தேவா,இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் புதிய படத்துக்காக இணைந்துள்ளது. பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை மனோஜ் என் எஸ். தயாரித்து இயக்குகிறார்.
இது குறித்து இயக்குனர் மனோஜ் என் எஸ்.கூறுகையில்,”இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்க இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணியை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைத்துள்ளோம். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.
இப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.இதில் யோகி பாபு ஒரு வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடுவோம்.இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் – இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம். என்கிறார்.