“அழகி-2’வுக்காக நான் காத்திருக்கிறேன்”! தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்!!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2002-ல் பார்த்திபன் தேவயானி, நநதிதாதாஸ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகி . பல வருட இடைவெளிக்கு பின் தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வெளியாகியுள்ளது . இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடத்த்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் பேசுகையில்,”
“தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார் சார் என்று என்னிடமே கேட்பார். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும் என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்களா என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
இங்கே தளபதி பேசியது எல்லாமே உண்மை விஷயங்கள்தான்.. ஆனால் உண்மைக்கு நாட்டில் மரியாதையே கிடையாது. பொதுவாகவே விநியோகஸ்தர்களுக்கு என ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அதை அழகி போன்ற படங்களின் மூலமாக உடைத்தது எல்லாம் ரசிகர்கள் தான். நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பேர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை.
சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நெருங்கி போயிருப்பார். பெண்கள் கணவனை எல்லாவிதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும். இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும். காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன். (உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா தேவயானி ?) . தேவயானி கதாபாத்திரமும் அவர் அதில் நடித்த விதமும் சிறப்பாக இருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம் எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன் என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து அந்த படத்தின் நடிக்க உதவிஎதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பலரும் இதில் பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன் தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்து தான் தற்போது 13 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் டீன்ஸ் என்கிற ஒரு அட்வென்சர் த்ரில்லர் படத்தை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் அது வெளியாகிறது.
அழகி படத்தை தேவயானி ஒரு மேஜிக் என்றார். அதையே தான் தமிழில் கண் கட்டு வித்தை என்று சொல்வேன். சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார். ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும். இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார். அதுதான் எத்தனை வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி-2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது. தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை.. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகல்க்கு பார்த்திபன் தேவயானி பல சுவாரஸ்யமான பதிகளை அளித்தனர்,
“உங்களுக்கு நிஜத்தில் இதுபோன்று காதலிகள் இருந்திருக்கிறார்களா ? அவர்களை மீண்டும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டதா ? என்று பார்த்திபனிடம் கேட்டதற்கு, “நந்திதா தாஸை ரோட்டோரத்தில் பார்த்தபோது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதுபோல பலமுறை நிஜத்திலும் ஏற்பட்டுள்ளது, இன்னும் அது மாதிரி நிறைய முறை ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்னுடைய அடுத்த புத்தகத்தின் பெயர் கூட ‘வழிநெடுக காதல் பூக்கும்’ என்பதுதான்.. காதல் என்பது ஒரு முறை மட்டும் வந்து போய்விடாது. அது வந்து கொண்டே இருக்கும். அழகி படத்தின் ரீ ரிலீஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் தயாரிப்பாளர் எங்களுக்கு ஒரு சின்ன வீடாவது வாங்கி கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ஒரு பக்கம் புதிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் இப்படி பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டபோது, “எப்போதுமே நல்ல விஷயங்கள் பழையதாக இருந்தாலும் திரும்பத் திரும்ப அலைகள் போல மீண்டும் மீண்டும் தேடி வரும். இந்த அழகி படம் கூட தேவதாஸின் இன்னொரு வெர்ஷன் தான். இது ஒரு சிறந்த மைதானம். யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.. பொங்கல் தீபாவளி சமயத்தில் ஏன் பெரிய படங்களை ரிலீஸ் செய்கிறேர்கள் ? அந்த சமயத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.. காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதே ஒரு தீபாவளி, பொங்கல் போல பண்டிகை தானே..?
என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு ‘டார்க் வெப்’ என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய ‘டீன்ஸ்’ படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்.
ஒரு நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதை விட்டுவிட்டு ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக சென்று தேவயானி வேலை பார்த்தாரே அவர் தான் ‘அழகி’.. இல்லையில்லை பேரழகி. அழகி படத்தின் வெற்றிக்கு பிறகு நானும் நந்திதா தாஸும் அடிக்கடி பேசும் சமயத்தில், நான் ஒரு கதையை தயார் செய்தேன். ஆனால் அது அழகி 2 அல்ல. ஆனால் அதில் சண்முகம், தனலட்சுமி மட்டுமே இருப்பார்கள். அந்த கதையை கேட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அப்போது தங்கர் பச்சான் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ‘அழகி 2’ என்கிற பெயரில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டார். ஆனால் இப்போதும் நந்திதா தாஸ் இந்த படத்தை எப்போது துவங்குகிறீர்கள் எனக் கேட்டு வருகிறார். தங்கர் பச்சன் சார் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நான் வாழ்த்தியதற்கு காரணமே இந்த அழகி 2 படத்தை நான் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஒரு பயங்கர சுயநலவாதி.
அழகியின் 51 சதவீதம் இளையராஜா சார் தான்.. மீதி 49 சதவீதம் தான் நாங்கள். இந்த காலகட்டத்தில் ரஜினி சார் மட்டுமே பத்தாது என்று இந்த பக்கம் விஜய் சேதுபதி, அந்த பக்கம் இன்னொரு பெரிய ஹீரோயின் தேவைப்படுகிறது. மணிரத்னம் பத்தாது என்று இந்த பக்கம் கமல்ஹாசன் தேவைப்படுகிறார்.. அவர் பத்தாது என்று பகத் பாஸில் தேவைப்படுகிறார். இப்படி பெரிது பெரிதாக போராடிக் கொண்டிருக்கும்போது நான் வெறும் 13 திறமையாளர்களை மட்டுமே நம்பி ‘டீன்ஸ்’ என்கிற ஒரு படத்தை எடுத்து வருகிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் பெரிய அளவில் மரியாதை கொடுத்தால் அழகி படத்தில் இதேபோல் நடித்த இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து ஒரு படம் எடுப்பேன்” என்று கூறினார்.