உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்,
அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான மே 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.