சஸ்பென்ஸ் திரில்லராக உருவான மகாராஜா!

  நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது படமாக  மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. .இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன்  , நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பலர்   நடித்துள்ளனர். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான  நிலையில், தற்போது இப்படத்தின் படத்தின் டிரைலர்  வெளியாகி இருக்கிறது.  

இப்படம் குறித்து அதன் இயக்குனர்  நித்திலன் சாமிநாதன்  கூறுகையில்,” இப்படம் விஜய் சேதுபதியின்  50 வது படமாக உருவாகியுள்ளது. .அவரிடம் கதை சொன்ன போது கூட எனக்கு இது தெரியாது. படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தெரியும்.இப்படத்தில் விஜய் சேதுபதி  மகாராஜா என்ற  சிகை அலங்காரக் கலைஞராக நடித்துள்ளார். ஒரு சாதாரண பெரிய படிப்பு அறிவு இல்லாத இளைஞனின்  வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தால் அதை  அவன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை  திரில்லர் கலந்து சொல்லியிருக்கிறோம்.

இப்படத்தின் டிரைலரில், விஜய் சேதுபதி தேடும் ‘லட்சுமி’யார்? என்ற கேள்விக்கு நான் இப்போது பதில் சொல்ல முடியாது.அந்த சஸ்பென்ஸை படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். லட்சுமி என்பது பெண்ணா அல்லது ஒரு பொருளா என்பது அவரவர் பார்வைக்கு உட்பட்டது.ரசிகர்கள் லட்சுமியை எப்படிப் பார்க்கிறார்களோ அது அப்படியே  இருக்கும். லட்சுமி  பற்றிய சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், படத்தின் மிகப்பெரிய பலமே அந்த ஒரு கேள்வி மட்டும் அல்ல, அதைச்சுற்றி மேலும் பல சுவாரசியங்கள் படத்தில் இருக்கிறது.. அவை அனைத்தும் முழுப் படத்தையும் சஸ்பென்ஸாக நகர்த்திச் செல்லும். நிச்சயம் இந்தப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும்”என்கிறார்..