ராயனும் வருவான் தீயா…. ! படக்குழு அதிரடி அறிவிப்பு!!
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள புதியபடம் ,’ராயன்’. வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ளது.
இதில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் புதிய போஸ்டரை ‘ராயனும் வருவான் தீயாய்’ என்ற தலைப்போடு அடுத்த மாதம் 26-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாவதோடு, இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இப்படத்தை அடுத்து தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.