கார்த்தி படப்பிடிப்பில் விபத்து: ஸ்டண்ட் நடிகர் பரிதாபமாக உயிரிழந்தார்!

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார்-2 படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 15ம் தேதி பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று நடிகர் கார்த்தி மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்ற சண்டைக்காட்சிபடமாக்கப்பட்டு வந்தது. அப்போது புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஏழுமலை என்ற ஸ்டன்ட் நடிகர் 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராமல் தவறி கிழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி சண்டைக் கலைஞர் ஏழுமலையை மீது அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏழுமலை உயிரிழந்தார். ஏழுமலை சண்டைக்காட்சியின் போது எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும்,கயிற்றை கட்டிக்கொள்ளாமல் இருந்ததால், கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் படக்குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தரப்பு கூறியுள்ளதாவது,, ” ஜூலை 16ஆம் தேதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அப்போது சுமார் இரவு 11.30 மணியளவில் ஏழுமலை என்ற ஸ்டண்ட் கலைஞர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி, படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டு இருந்து சிறிய மேசை ஒன்றில் விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த வரை நாங்கள் உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.: ஆனால் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சர்தார் 2 படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த ஆழ்ந்த வருத்தத்தை உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், இந்த துக்கத்தில் சர்தார் 2 படக்குழுவும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.