பங்காளிச் சண்டைகள் என்பது சாதாரணமாகிப் போய்விட்டது. வெட்டுக்குத்துவரை போவதும் உண்டு. ஆனால் பிரிந்த உறவுகள் ஒன்று கூடுவது என்பது எப்போதாவது நிகழும் என்பது வியப்புக்குறி.! அந்த ஆச்சரியத்தை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார்கள். பெரிய நடிகர்களை தவிர்த்து , ஆனால் பழகிய மண்ணின் மைந்தர்களை கொண்டு கதையை உயிர்ப்பித்திருக்கிறார் இயக்குநர் நாகராஜ் கருப்பையா.
நாயகன் சுரேஷ் நந்தா. தயாரிப்பாளரும் இவரே. மத்தாப்பு மைனர் அல்லர். எளிமையான தோற்றம் ,இயல்பான நடிப்பு.
அண்ணன் தம்பியாக வேல. ராமமூர்த்தி ,மறைந்த மாரிமுத்து. இருவரும் சண்டைக் கோழிகள் . இவரின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் ? அவர்களும் அரிவாளின் ரசிகர்கள் . ஆனாலும் வெள்ளைப் புறாவாக சுரேஷ் நந்தா . பெரியவரது இளைய மகன். ஐநா சபையின் அறிவிக்கப் படாத தூதனாக செயல்பட்டு பாச மலர் குடும்பமாக புதுப்பிப்பது இவர்தான்.!. வேல. ராமமூர்த்தியும்,மாரிமுத்துவும் எப்பேர்ப்பட்ட திறமையாளர்கள் என்பது தமிழ நாட்டுக்குத் தெரியும். கதை தொய்வு இல்லாமல் செல்வதற்கு இவர்களும் காரணம்.
சுரேஷ் நந்தா தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்காக காட்சிகளை அமைத்துக் கொண்டிருந்தாலும் அவை கதைக்கு அவசியமாக இருந்து விட்டது. இவரது ஜோடியாக நந்தனா. சிறந்த ஜோடி .
.அண்ணனின் பாசத்துக்காக எங்கும் பாச மலர். தீபா சங்கர் .சிறப்பான நடிப்பு.
தீபன் சக்கரவர்த்தியின் இசை, கதைக்கு கல்லீரல் மாதிரி. வாழ வைக்கிறது.
எம். சீனிவாசனின் ஒளிப்பதிவும் சிறப்பு.
பிரிந்தது ,பின்னர் சேர்ந்தது இயல்புடன் இல்லை. காரணங்களிலும் கனம் இல்லை.
ஆனாலும் வீராயி மக்கள் மீது அன்பு காட்ட முடிகிறது.
—தேவிமணி