மின்மினி’ படத்தின் மூலம் தொடங்கிய  இசைப்பயணம்! -கதீஜா ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான  ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற  ‘புதிய மனிதா…’ பாடலின் மூலம் அவரது மகள் கதிஜா  பாடகராக அறிமுகமாகி  அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும்  அறிமுகமாகியுள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இது குறித்து இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான்  கூறியுள்ளதாவது,  “இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும். தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த இயக்குனர் ஹலிதா ஷமீம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது நன்றி” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.