ஹேமா அறிக்கை காரணமாக நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர் தொடர்ந்து சிறப்புக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மோகன்லால் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ’தங்கலான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை பார்வதி, கேரளா சினிமாவின் நிலை மாற வேண்டும் என்றால், சிறந்த தலைமை வரவேண்டும். வரும் காலத்திலாவது மோகன்லால் போல் கோழைகள் தலைவராக இல்லாமல் நல்ல தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று ஆவேசமாக கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபப்பான சூழலில், மலையாள நடிகர் சங்க (அம்மா) முன்னாள் தலைவரும், பிரபல மூத்த நடிகருமான மோகன்லால் இன்று ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:”ஹேமா கமிட்டி அளித்திருந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். விசாரணை நடைபெற்று வருகிறது . நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் தான்.இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது. தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் ‘அம்மா ’ அமைப்பை மட்டுமே குறை கூற வேண்டாம்; அனைத்து கேள்விகளுக்கும் ‘அம்மா’ அமைப்பால் பதில் சொல்ல முடியாது. நான் ஓடி விட்டதாக பலர் பேசுகின்றனர். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை இங்கே.. கேரளாவில்தான் இருக்கிறேன்.”
இவ்வாறு நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.