என் ஹீரோ விஜய்சேதுபதி மாதிரி ! -இயக்குனர் சுசீந்திரன்

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள புதிய படம் “2K லவ்ஸ்டோரி”.புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பைக் கோவை மற்றும் சென்னையில் படக்குழு நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நாயகனை ஜெகவீர் அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தி பேசியதாவது, “நான் இந்த நிகழ்வுக்கு வரக் காரணம் இயக்குனர் சுசீந்திரன் தான். அவரது மாமா கலைச்செல்வன் என் 38 வருட நண்பர், அவர் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவில் கலந்து கொண்டேன். காதல் நம் மனதை விட்டு அகலாத ஒன்று, இன்று எல்லோரும் சொல்வது ‘2கே கிட்ஸ்’ கதைகளை தான்.அந்த வகையில் அவர்களின் கதையை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இந்தப்படம் மிக நல்ல படமாக அமையும்.புதுமுகங்களை வைத்துப் படமெடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார் இப்படத்திற்கு வி.எஸ். .ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விஷயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச் செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர் ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறையப் புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன், அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார். நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார்