வேட்டையன் . ( விமர்சனம்.) வைத்த ‘குறி’யில் தப்பியது ‘இரை’!!
வேட்டையன் .
திரைக்கு வருவதற்கு முதல் நாள் வரை ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்த படம்தான் வேட்டையன், கதை என்ன என்பது தெரியாமலேயே.!
அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது அவைகளுக்கு அன்பு. ! உச்ச வசூல் 1000 கோடி என்பதாக அவைகளே நிர்ணயம் செய்தன. வெடி போட்டார்கள். அது தலைவரது ரசிகர்கள் மீது வைத்திருக்கிற அன்பு.
வேட்டையன் எப்படி இருக்கிறான்?
அழகிய குமரி மாவட்டத்தில் ஒரு பகுதி. பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன். சற்றே முற்போக்குச் சிந்தனை இருக்கிற இளைய தலைமுறை .பள்ளிக்கூடத்தில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தவர் , மாவட்ட எஸ். பி. யான ரஜினிக்கு பெட்டிசன் போடுகிறார்.கடிந்து ,விரைந்து நடவடிக்கை எடுத்த எஸ். பி ரஜினி குற்றவாளிகளை போட்டுத்தள்ளுகிறார். என்கவுண்டர் ஸ்பெஷசலிஸ்ட்.!
எஸ். பி. யின் சிபாரிசுடன் சென்னைக்கு மாற்றலாகிற ஆசிரியை அங்கு கோரமான பாலியல் வன்முறைக்கு இரையாகி கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்.காவல்துறை குற்றவாளியை கண்டுபிடிக்க தடுமாறுகிறது. எஸ். பி. ரஜினியின் துணை தேவைப்படுகிறது. விரைந்து வந்த ரஜினி சில நாட்களிலேயே குற்றவாளியை கண்டுபிடித்து அவனையும் போட்டுத்தள்ளுகிறார் .
மனித உரிமைக் கமிஷன் அனுப்பிய நீதிபதி அமிதாப் பச்சன் “சுட்டுக்கொல்லப்பட்டது ஓர் அப்பாவியை “என்று அதிர்ச்சி அளிக்கிறார். இதன் பின்னர் என்னென்ன நடக்கிறது என்பதுதான் வேட்டையன்.
“குறி வெச்சா எரை விழனும் ” என்று வீர வசனம் பேசிய ரஜினி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டதும் நொறுங்கிப் போகிறாரே ,அது அவருக்கு புதிசு. இல்லை இல்லை இந்தப்படத்தில் ரினீவல் பண்ணிக்கொண்டிருக்கிறார். நடிப்பதை விட்டு ஸ்டைல் என்று மாறியிருந்தவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் சில காட்சிகளில்.! அவர் மன்னிப்பு கேட்கிற சீனில் உருகிப் போய் இருக்கிறார். உடைந்து போனார் என்பதே சரியாகும். ஆனால் இதை அவரது ரசிகர்கள் ஏற்பார்களா ? உடல் தளர்ச்சியையும் மீறி சில காட்சிகளில் அவர் சூப்பர்தான்.!
அந்த ரசிகர்களுக்காக பல காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை இந்த கதைக்கு பலவீனம்.!திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ரஜினிக்காக எஸ்பி கேரக்டரில் போலீஸ் கட் வைக்காதவர் இயக்குநர் த. செ . ஞானவேல் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாமே !. லாக் அப் டெத் கருத்தை மய்யமாக கொண்ட ஜெய் பீம் இயக்குநர் என்கவுண்டர் டெத் சொல்ல வந்த இடத்தில் காம்பரமைஸ் ஆகி வலிமையை இழந்திருக்கிறார் என்பது எளியேனின் கருத்து .
மனித உரிமை பேசும் அமிதாப்பச்சன், அந்த வேடத்துக்கு அட்சர சுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.ஓய்வு பெற்ற நீதிபதிதான் அம்மாதிரியான கமிஷன் தலைவராக நியமிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர் பலவித கோணங்களில் பார்க்கிறபோது சிறந்த தேர்வு என்பதே எனது கருத்து. இந்திய ஒன்றியமே அறியும் உச்சநடிகர் பேசும் வசனங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை. அதிகாரத் திமிரில் ஆட்டம் போடுகிறவர்களுக்கு சரியான செருப்படி வசனங்கள் !!
ரஜினியின் மனைவியாக வருகிறார் மஞ்சுவாரியர்,முதலாவது காட்சியில் வருகிற நடனத்தில் “உழைப்பு” இருக்கிறது. இவர் வருகிற ஏனைய காட்சிகளில் நடிப்பே இல்லை.
ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயனுக்கு இந்தப்படம் வாய்ப்புகளை அள்ளி வரும் . சிறந்த நடிப்பு. அவரது கேரக்டர்தான் வேட்டையனின் அடிநாதம் . அவரின் நடிப்பு படத்திற்கு பலம்.
பகத்பாசிலின் கதாபாத்திரம் மாறுபட்டது.அதில் மிக நன்றாக நடித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.காவல்துறையில் இருக்கிற சில இன் பார்மார்கள் அதி புத்திசாலிகள். இவரின் சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்துகிற போதுதான் ரித்திக சிங்கின் காதல் வெளிப்படுகிறது. அவர்கள் அவ்வப்போது பார்த்துக் கொண்ட பார்வை மலர்ந்து மடிவது கல்லறையில்தான்.!சிறந்த கவிதை .!
கல்வியில் கல்லா கட்டுகிற திமிங்கலமாக ராணா டகுபதி பொருத்தமான தேர்வு.
கிஷோர், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ரமேஷ் திலக்,ராவ் ரமேஷ் ஆகியோர் தேவைப்பட்ட கேரக்டர்களில் வந்து போகிறார்கள்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு குறை யொன்றும் இல்லை .
அனிருத் இசை வசை பாடத் தோன்றுகிறது .
பிலோமின் ராஜின் கத்தரிக்கு , இரண்டாம் பாதியில் நிறைய வேலை இருந்திருக்கிறது ஆனால் சும்மாவே இருந்திருக்கிறது.
த.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கிறார்.அதிக உழைப்பு . பலன் பைசா மேட்டரில் லாபம். திரைக்கதை பலவீனம் .
நீட் . பயிற்சி மய்யக் கொள்ளை, போதை ,அரசின் பலவீனம் எல்லாம் இருந்தும் இயக்குநர் அடி வாங்கி இருக்கிறார் என்பது கவலை தருகிறது.
புலிக்கு வைத்த குறி, குருவியை ..?
–தேவிமணி