ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் தீபக் குமார் தாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம், ‘தீபாவளி போனஸ்’.
இப்படத்தில் விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடிக்க. இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் , புதுமுகங்களும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார். இப்படம் குறித்து அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ கூறுகையில்,”தீபாவளி பண்டிகை வருவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது தொடங்கும் கதை, தீபாவளி பண்டிகையின் போது முடிவடையும். ஒரு நடுத்தர குடும்பம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு எப்படி தயராகிறார்கள் என்பதை எளியவர்களின் வாழ்வியலாக மட்டும் இன்றி காட்சி மொழியில் பிரமாண்டமாகவும் சொல்லியிருப்பது படத்தின் தனி சிறப்பாக இருக்கும். குறிப்பாக கதை நடக்கும் மதுரையில், தீபாவளி காலங்களில் கிழக்கு மாசி வீதி, மேற்கு மாசி வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் ஏராளமான கடைகள் போடப்பட்டிருக்கும், எப்போதும் மக்கள் கூட்டம், என்று பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பையும், நான்கு வீதிகளின் பிரமாண்ட மக்கள் கூட்டத்தையும் திரையில் கொண்டு வர வேண்டும் என்று சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை செலவு பற்றி யோசிக்காமல் செட் போட்டு அந்த காட்சியை தத்ரூபமாக படமாக்கியுள்ளோம் அதேபோல், மதுரையில் இருப்பவர்களுக்கு இது தெரியும், தீபாவளி நேரத்தில் பரபரப்பான சமயத்தில், திடீரென்று 5 நிமிடங்கள் மழை பெய்யும், அப்போது மக்கள் கூட்டம் அனைவரும் ஒதுங்கிவிட, கடைகள் மட்டுமே அப்படியே இருக்கும். அவ்வளவு கூட்டம் எங்கு போனார்கள் என்பது தெரியாமல் இருப்பதோடு, அந்த ஐந்து நிமிட மழையில் அந்த பகுதியே அமைதியான சூழலுக்கு திரும்பி, விளக்குகளின் வெளிச்சத்தில் அனைத்து கடைகளும் ஜொலிக்கும் காட்சி பார்ப்பதற்கே ஒரு ஓவியம் போல் இருக்கும். நிச்சயம் இந்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது மக்கள் வியப்படைவார்கள் என்கிறார் .