‘சக்சஸ் மீட்’டை பார்த்தே ரொம்ப நாளாகி போச்சு…நெகிழ்ச்சியில் ஜீவா!
வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா பேசுகையில்,” ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் ஒரு நடிகராக என்னை மாற்றினாலும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரூட்டை மாற்றி ஈ, கோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது போன்ற படங்களை எடுக்க துவங்கி விட்டார்கள். அந்த வகையில் இந்த பிளாக் படத்தை மக்களை யோசிக்க வைக்கும் ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று தான் அவர்கள் நினைத்தார்கள். ஒரு சிக்கலான கதையை எவ்வளவு எளிதாக பண்ண முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறோம். அறிவாளியாக இருக்கிறேன், அதனால் படம் பார்ப்பவர்களின் அறிவாளியாக மாற்றுகிறேன் என படம் எடுக்க முடியாது. மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறவன் இப்படி ஒரு படம் பார்க்கும்போது என்னை எதுக்குப்பா இவ்வளவு யோசிக்க வைக்கிறீங்க என்று கேட்பார். ஆனால் அவகளும் இன்று மாறி விட்டார்கள். அவர்கள் திரையரங்குகளில் சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. இந்த படத்திற்கு இரண்டாவது பாகம் எப்போது எடுக்கிறீர்கள் என எல்லோரும், ஏன் எங்கள் வீட்டிலும் கூட கேட்கிறார்கள்.
இந்த கம்பெனி என்னிடம் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுத்து தான் ஆக வேண்டும். இதற்குமுன் வணிக ரீதியான படங்களில் தான் நடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் எனக்கு சில சரிவுகள் ஏற்பட்டது. கோ போன்ற படத்திற்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க ரிஸ்க் எடுக்கிறேன் என்றால் அந்த சரிவு கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் காலையில் கேமரா முன் நிற்கிறோம். படம் பார்த்தவர்கள் நீங்கள் நன்றாக நடித்து இருக்கிறீர்கள் என கூறினார்கள். நான் சாதாரணமாகத்தான் நடித்திருந்தேன். அதனால் இந்த பாராட்டுக்களுக்கு படக்குழுவினர் தான் காரணம்.இவ்வாறு அவர் பேசினார்