ஏழு பிறவிகள் இருக்கிறது என்கிற நம்பிக்கை இன்றும் மனிதர்கள் மத்தியில் ஜீவனுடன் இருந்து கொண்டிருக்கிறது. அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்கிற மனிதர்களின் நம்பிக்கையே அதுதானே? அந்த நம்பிக்கையில் பிறந்த கதை தான் கங்குவா . இரட்டை வேடங்களில் அத களம் செய்திருக்கிறார் சூர்யா .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் கங்குவா . அரசன். அவனது வாழ்க்கையில் வலிகள் அதை எப்படி பல வழிகளில் கடந்தான் என்பதையும் , அதே நிகழ்வுகள் பின்னர் நடப்பதும் அதை எதிர்கொள்வதும் தான் கதை. இயக்குநர் சிறுத்தை சிவாவின் முகுளத்தின் சேதமில்லா நேரத்துச் சிந்தனை .!
1070 -ம் ஆண்டுக்கு நம்மை கடத்துகிறார்கள். ‘பெருமாச்சி’ எனும் நிலப் பரப்பின் தலைவன் தான் கங்குவா . தமிழரின் முதல் திணை குறிஞ்சி. அக்காலத்திய தலைவன். “பிறவிகள் கடந்தாலும் உனை காப்பேன்” என்று சூளுரை கொள்கிறான் , ஒரு சிறுவனை காப்பாற்றுவதற்காக !அந்த சிறுவனை நடப்பாண்டில் அதாவது 2024 -ல் சந்திக்கிறான் கங்குவா . ஆபத்தில் சிக்கியுள்ள அவனை காப்பாற்றினானா, இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
இந்தப் படத்தின் நாடி நரம்புகள் சூர்யா என்றால், ரத்த நாளங்களாக கிராபிக்ஸ் அண்ட் வி. எபெக்ஸ் வேலைகள். படத்தை தாங்கி நிற்கிற பில்லர்கள். மதுரை நாயக்கர் காலத்துத் தூண்கள் என்றாலும் மிகை இல்லை. வீரம் காட்டும் சூர்யாவுக்கு மக்களிடம் அன்பு காட்டவும் தெரியும், படையினரை வழி நடத்தவும் முடியும், என்பதை அந்த ‘3D’ எபெக்ட் டிலும் காட்டியிருக்கிறார்கள் . முப்பரிமாண கண்ணாடியிலும் ‘3D’ தெளிவாக காட்டியிருக்கிறது ஒளிப்பதிவு . சண்டைக் காட்சிகளில் தனிக்கவனம். சமகாலத்தில் ஃபிரான்ஸிஸ் கதாபாத்திரத்தில் திஷா பதானியுடன் சூர்யா அடிக்கும் லூட்டி 2K இளைஞர்களுக்கானது. ‘கங்குவா’ கதாபாத்திரம் வயது வித்தியாசமின்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறது. படத்தில் அதிக காட்சிகளில் நடித்த சூர்யா, ஒவ்வொரு காட்சிகளிலும் பிரம்மாண்டம் காட்டுகிறார். 2D, 3D, Imax உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் சிறப்பு என மீண்டும் ‘கங்குவா’ பதிவு செய்வது பெருமைதான்.!
திஷா பதானிக்கு வாய்ப்புக் குறைவு. கவர்ச்சி நாயகி. .
வில்லனாக பாலிவுட் பாபிதியோல், உருட்டல் மிரட்டல்கள் .
கருணாஸ், நட்டி, போஸ்வெங்கட் உள்ளிட்டவர்களில் கருணாஸின் கடமை சிலிர்க்க வைக்கிறது.தற்காலகட்டத்தில் வரும் கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
கடைசியில் வரும் நடிகர் கார்த்தி, அடுத்த பார்ட்டின் முன்னோட்டம் மாதிரி தெரிகிறார். சூர்யா – கார்த்தி சகோதரர்கள் சாதனையாளர்கள்.
கலை இயக்குநர் மிலன், சண்டைப் பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். தனியொருவராக 500 படைவீரர்களை சூர்யா எதிர்கொள்ளும் சண்டைக் காட்சி மிக நன்று.
தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் பின்னணி இசை கொஞ்சம் மிகை.
வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு கங்குவாவின் அடையாளமாக இருக்கிறது. மிகச் சிறந்த காட்சியனுபவம் .
25 பெண்கள் 15 படைவீரர்களைக் கொல்லும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் பெருமைக்குரியதாக அமைந்திருக்கின்றன.
சூர்யாவின் நடிப்பு, வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு ஆகியன, படத்தைக் காத்து நிற்கின்றன. சில நேரங்களில் படத்திற்கான விளம்பரங்கள், அதீத பிரச்சாரமாக ஆகும் போது, அதுவே படத்தின் பலவீனமாகிவிடும்!!!
–தேவிமணி.