ஆர்வக் கோளாறு அல்லது ஆய்வுக் குறைவு இவற்றின் வெளிப்பாடுதான் ‘மாயன்’என்கிற திரைப்படம் என்று நம்புகிறேன்.
கி. மு .2600 க்கு முந்தையது மாயன் அல்லது மாயா நாகரீகம். இவற்றின் தாக்கம்தான் இந்த மாயன் படமா?
மாயன் என்றால் திருமால் என பொருள் என்கிறார்கள். கரியவன் ,வஞ்சகன் எனவும் சொல்லலாம் என்கிறது அகராதி.
ஆனால் கதையின் சிற்பி, மற்றும் இயக்குநர் ஜெ . ராஜேஷ் கண்ணா வேறு கோணத்தில் இந்த மாயனைக் காட்டுவதாக சொல்கிறார். ஆக மாயா நாகரீகத்தை மறந்து விடுங்கள்.
இந்த மாயன் ஆதி சிவனை நம்புகிறவன் . அந்த சிவனுக்கு பத்து தலைகள் . இவனின் பக்தன் கதையின் நாயகன். சொந்த வீடு இவனது இலக்கு. பல அவமதிப்புகள் ஆடுகளம் நரேன் நசுக்கிப் பிழிகிறார் .எல்லாம் பொறுக்கும் நாயக நடிகர் வினோத் மோகனுக்கு மின்னஞ்சல் வருகிறது.
“இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது. “ இந்த குறுஞ்செய்திக்குப் பின்னர்தான் நாயகன் வெகுண்டு எழுகிறார் . அவரது வாழ்க்கை முறையே மாறுகிறது. ஒரே அறை.! ஆடுகளம் நரேன் அம்பேல் . இதைப்போல பல நிகழ்வுகள். போலீஸ் அதிகாரி ஜான் விஜய்யின் கை பாணமாகி பலருக்கு சிவலோக பதவி கொடுக்கிறார்,முடிவு என்ன என்பது படம் பார்த்து தெரிந்து கொள்க. அல்லது படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்க.
நாயகனாக நடித்திருப்பவர் வினோத்மோகன், கனத்த தாடி மீசைக்குள் முகம் புதையுண்டு நடித்திருக்கிறார் . சிவனுக்கு அடிமை. பக்தி அவ்வப்போது ஆவேசம் கொள்கிறது. நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
பிந்துமாதவி.கதையின் நாயகி. வாய்ப்பில்லாமல் இருந்தவரை கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்கு பழகிப்போன அவரது பெரிய கண்கள்,சிரிப்பு..அதே நடிப்பு.!
கெட்டவர்களாக சாய் தினா,ராஜசிம்மன் . சாய் தினாவுக்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. பிரஸ் ஷோ வுக்கு வந்திருந்தார். ஓரமாக நின்றவர் கதையிலும் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.
ஜான்விஜய் ,கவுரவ வேடத்தில் பியா பாஜ்பாய், ஆதிகாளியாக மரியா, சில காட்சிகளில் மட்டும் வரும் ரஞ்சனா நாச்சியார் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யவில்லை.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் . அடுத்த வாய்ப்பு வரும் .!
ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத்தின் கம்ப்யூட்டர் ஜாலங்கள் , காட்சிகள் அதிகம்.பின்னியிருக்கிறார் மனிதர். கதையின் உண்மையான நாயகன்.!
எழுதி இயக்கியிருப்பவர் ஜெ.ராஜேஷ் கண்ணா.இவரது ஆசைக்கு பெரும் பணம் கை கொடுத்திருக்கிறது.
நம்பினோர் கைவிடப்படார் என்று இயக்கியிருக்கிறார்.
நம்ம ரசிகப் பெருமக்கள் என்ன சொல்லப்போகிறார்கள்.?ஆனால் பெரும் மழை நான்கு நாள் வருமானத்தைக்கூட கட் பண்ணி விட்டதே! மழைக் காலம் . புயல் எச்சரிக்கை . தமிழ்த் திரையுலகத்துக்கும்தான் .!!!!!!
–தேவிமணி