மேக்ஸ். ( விமர்சனம்.) காவல் துறையின் மானம் காத்தவன்.
தமிழ்த் திரைப்பட உலகில் பிரமாண்டங்களின் நாயகன் என்பதாக கலைப்புலி தாணுவை சொல்வார்கள். இரு சிங்கங்களை வைத்து படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு இருக்கிறது.
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் இவரும் இணைந்து தயாரித்திருக்கிற படம்தான் ‘மேக்ஸ்.’ சென்னை படப்பையில் பிரமாண்டமாக செட் போட்டு பெருத்த செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கிச்சா, வரலட்சுமி சரத்குமார்,சுனில் ,சம்யுக்தா ,சுகிருதா வாகில் அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம் விஜய் கார்த்திகேயா. இவர் பத்து நாள் ஹீரோ வீட்டில் தங்கி இருந்து அவரது ஆக்ட்டிவிட்டீஸ்களை கவனித்து கேரக்டரை செதுக்கி இருக்கிறார் . செம கவனிப்பு இருந்திருக்கும் போலிருக்கிறது. நாயகனின் கேரக்டர் எரிமலையாக இருக்கிறது.
காவல்துறை என்றால் காலிகளின் துறை என்று சொல்லுகிற அளவுக்கு சினிமாக் காரர்கள் சித்தரித்து வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் வருகிற சுதீப் , இளவரசு மாதிரியான காவல் துறையை பார்த்தால் பாலைவனச்சோலை மாதிரி தென்படுகிறது. அத்தனை நல்லவர்கள்.!
விடிந்தால் பணி ஏற்பு என்கிற கட்டத்தில்ஊருக்கு வருகிற ஆய்வாளர் சுதீப் அந்த இரவிலேயே இரண்டு குடிகார மட்டைகளை காவல் நிலையத்தில் வைத்து பூட்டி விட்டு செல்கிறார் . விடிந்து பார்த்தால் இரண்டு மட்டைகளும் காலி. படுகொலை.! செத்த இரண்டு அராத்துகளும் செல்வாக்கான மந்திரி வீட்டு செல்லங்கள் .! காவல் துறைக்கு ஜன்னி வராத குறை . என்ன நடக்குமோ என்கிற பயம். இப்படியாக கடக்கிறது அந்த இரவு..!
ஆனால் ஆய்வாளர் சுதீப் எப்படி எதிர்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்பதே இந்த அதிரடி ஆக்சன் பிலிம் ஆன ‘மேக்ஸ் ‘கதை.
வாட்ட சாட்டமான தோற்றம் . எத்தனை பேர் வந்தாலும் கால் பந்து அடிப்பது மாதிரி அதிரடிதான் என்கிற வகையில் சண்டை காட்சிகள். நிறைவாக செய்திருக்கிறார் சுதீப். காவல் துறையினரின் காக்கும் கடவுள் ! சூப்பர் பா !! இவருக்கு துணையாக இளவரசு . தி பெஸ்ட் ! தமிழ் உலகில் இருக்கிற பல்சுவை நடிகர்களில் முதன்மையானவர்.
காவல் துறையின் களங்கம் வரலட்சுமி சரத்குமார். அதிகாரியாக இருந்து கொண்டு சேம் சைடு கோல் அடிப்பவர். வில்லனின் கைத்தடி ! கரெக்ட் பிட் !.
சம்யுக்தா ஹொரனார்டு , சுகருதா வாகலே என்கிற அண்டை மாநில நடிகைகளும் காவலர்களாக சிறப்பாக சல்யூட் அடித்திருக்கிறார்கள்.
எவர் கிரீன் வில்லனாக சுனில், ஜால்ரா அமைச்சராக சரத் லோகிதாஸ்வா, இன்னொரு அமைச்சராக ஆடுகளம் நரேன் ஆகியோரோடு வம்சி கிருஷ்ணா, பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, அனிருத் பட், உக்ரம் மஞ்சு உள்ளிடோரும் கடமை ஆற்றி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் கடுமையான உழைப்பு காட்சிகளில் இருக்கிறது.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ்லோக்நாத், ஒரே இரவில் நடக்கிற நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சி நிரல் அமைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பவர் விஜய்கார்த்திகேயா. வாய்ப்புகள் தேடி வரும் வகையில் கதை சொல்லி கவர்கிறவர் என்பது தெரிகிறது..
பார்க்கலாமா ?
டாஸ் மாக் போய் லிவரை கெடுத்துக்கொள்ளாமல் மேக்ஸ் பார்த்து தில்லாக வாழுங்கள்!
–தேவிமணி ..