கலன் .( விமர்சனம்.) போதைக் கதைகளில் இதுவும் ஒன்று. கைகாரி காயத்ரி !!

இந்திய ஒன்றியத்திலும் , மாநிலத்திலும் செல்லப்பிள்ளைகளாக வளர்கிற போதைப் பொருட்களுக்கு ‘காட் பாதர்கள்’ யார் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதது இல்லை. கடைக்கோடி கிராமத்துக்குள்ளும் ஊடுருவி கொழுத்துப் போய்க் கிடக்கிறது.அதை சொல்லியிருக்கிறார் .

சிவகங்கை மாவட்டத்தைக் கதைக் களமாக கொண்டு வெளியாகி இருக்கிறது ‘கலன்’.  போதைப் பொருள் கடத்தலை அழிக்கும் முயற்சியில் இறங்கிய மகன் அதனாலேயே அழிகிறார் .பொறுக்காது வெகுண்டெழுகிற தாய் பத்ரகாளியாக மாறுகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது எஞ்சிய கதை. 

தாய் தீபாதான் வெட்டுடையார் காளி .இவரது மகனாக யாசர். கேரக்டர் பெயர் வேங்கை.  கஞ்சா வியாபாரிகளான  சம்பத் ராம்,காயத்ரி ஆகியோரிடம் இவரது நண்பன் வேலை பார்க்கிறான் . தொழில் அனுபவம் தனிக்கடை போட வைக்கிறது. பகை வளர்க்கிறது. வேங்கையை சம்பத் ராம் கோஷ்டி காலி பண்ணிவிடுகிறது.பலிக்கு பலி என இறங்குகிறது  தீபா கோஷ்டி !

சிவகங்கை ஏரியாவில் எப்படி பகை முடிக்கப்படுகிறது என்பதற்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. ஆனால் தீபா நியாயவாதியாக போராடுகிறார். வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. 

தீபாவின் தம்பியாக  அப்புக்குட்டி மிகை இல்லாது இயல்புடன் நடித்திருக்கிறார்.  

கஞ்சா வியாபாரியாக,  சம்பத் ராம் . மண் மணக்குது வில்லத்தனம், !

காயத்ரி, கைகாரி  அக்காவாக, மிரட்டுகிறார் . குண்டு விழிகளுடன், கையில் சுருட்டு சகிதமாக  வலு சேர்த்திருக்கிறார். அவரது நடிப்பு தனித்து நிற்கிறது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பினை வரிசை படுத்தினால், இவருக்கு முதலிடம். 

காவல்துறை அதிகாரியாக  சேரன் ராஜ்,  வழக்கமான நடிப்பு .!

இசையமைப்பாளர் ஜெர்சன் இசை, ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு படத்தின் பலம்.

எழுதி இயக்கியிருக்கிறார்  வீரமுருகன், . சில இடங்களில் சாதிய குறியீடுகள்  அப்பட்டமாக இருக்கிறது.  மதம் சார்ந்த  சர்ச்சை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.  லாஜிக் மீறல்கள்.

 போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்து வரவேற்புக்குரியது.

வசூலுக்கு உரிய படமாக மாற்றுவது மக்கள் கையில் !

–தேவிமணி .