‘கீதா ஆர்ட்ஸ் நிறுவனம்’ சார்பில், பன்னி வாஸ் தயாரிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு ஆகியோரின் நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், தண்டேல்.
தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார்.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் நடந்த ஒரு உணமை சம்பவத்தினை, கற்பனை கலந்த திரைக்கதையில் எழுதி இயக்கியிருக்கிறார், சந்து மொண்டேட்டி.
நாக சைதன்யா குடும்பம், கால காலமாக மீன்பிடி தொழில் செய்து வருகிறது. அவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் காதலித்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலில் உயிருக்கு உத்ரவாதம் இல்லாமலிருப்பதால் சாய் பல்லவி, நாக சைதன்யாவிடம் மீன்பிடி தொழிலை கைவிடுமாறு வற்புறுத்துகிறார். அதற்கு அவர் மறுக்கிறார்.
வழக்கம்போல் நாக சைதன்யா, தனது குழுவுடன் குஜராத்துக்கு மீன் பிடிக்கச் செல்கிறார். கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகின்றனர். இதனால், பாகிஸ்தான் கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது. நாகசைதன்யாவிடம் ஏற்பட்ட முரண் காரணமாக, வட்டித் தொழில் செய்யும் கருணாகரனை சாய் பல்லவி திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.
நாக சைதன்யா விடுதலையானரா? சாய் பல்லவி, கருணாகரனை திருமணம் செய்தாரா? என்பது தான், ‘தண்டேல்’.
நாக சைதன்யா, மீனவர் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். மீனவக் குழுத் தலைவன் ‘தண்டேல்’ ஆக, காதலனாக, நண்பனாக என சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தான் சிறையில் காதலுக்காக உருகுவது, தேசப்பற்றை வெளிப்படுத்துவது என அனைத்து காட்சிகளும் உணர்வினை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
சாய் பல்லவி, வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இருப்பினை பதிவு செய்வது போல், இந்தப்படத்திலும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். நாக சைதன்யாவை உருகி உருகி காதலிக்கும் போதும், கருணாகரனை அப்பாவின் சந்தோஷத்திற்காக திருமணம் செய்ய முடிவெடுக்கும் போதும், சிறையிலிருந்து காதலனை காப்பாற்ற போரடும் போதும் தனிப்பட்ட நடிப்பினால், கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். சிறப்பாக நடனமாடவும் செய்திருக்கிறார்.
வட்டித்தொழில் செய்பவராக கருணாகரன், க்ளைமாக்ஸ் காட்சியில் கலக்கிவிடுகிறார்.
மற்றபடி ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ், மைம் கோபி ஆகியோரும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத், பாடல் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.
புயல் காட்சிகள், சிறப்பாக இல்லை. கிராபிக்ஸ் காட்சிகள், சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
எமோஷனலான ஒரு நிகழ்வை, எமோஷனலே இல்லாமல் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் சந்து மொண்டேட்டி.
பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நாக சைதன்யாவை, ‘தண்டேல்’ கை விட்டுள்ளது!