மருத்துவர்களின் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

 தமிழ்த்திரையுலகில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதனைத்தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘இறுகப் பற்று’ படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். இதனையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்காதநிலையில்,  சமீபத்தில் அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் நடிகர் ஸ்ரீ போதை பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாரோ எனவும் கூறினர்.இந்நிலையில், நடிகர்  ஸ்ரீயின் குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”நடிகர் ஸ்ரீராம் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது  ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால் அவரது தனி உரிமையை  அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஊகங்களும் தவறான தகவல்களும் மிகவும் வருத்தம் அளிக்கிறது .மேலும் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்த ஒரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதை முழுமையாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.