
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.
இந்த ‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.’குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார்.
அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.
கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?
சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.

இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன.
அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள்.அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார் . பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன் .உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.
குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் .திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓபிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாடல் காட்சிகளைப் பார்த்தோம்.கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள்.பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை.கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார்.
இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.