விஜய்யின் ஜனநாயகன் வழக்கு வாபஸ்… ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜயின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இப்படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி தணிக்கைகுழு வாரியத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படக்குழு, உடனடியாக ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்துக்கு உடனடியாக சென்சார் சர்டிபிகேட் வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இதை எதிர்த்து தணிக்கை குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி முதலி லிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.மேலும், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதியும் வழங்கி இருந்தது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை தணிக்கை வாரியம் அணுகியுள்ளதால்,இப்படத்தின் வெளியீட்டு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாலும் படவெளியீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாரிப்பு தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருவதாலும், தனி நீதிபதி முன் உள்ள வழக்கைத் திரும்பப் பெற உள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் நாளையோ நாளை மறுதினமோ இந்த வாபஸ் பெறுவதற்கான தலைப்பில் இந்த வழக்கு பட்டியலிடப்படும். இதையடுத்து நீதிபதி பிடி ஆஷா முன்பு ஜனநாயகன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது படக்குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என கூறப்படுகிறது.இதையடுத்து மறு தணிக்கைக்கு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் சான்றிதழ் தொடர்பான முடிவு தெரிந்து விடும் என்பதால், படத்தை பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.