கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது .அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்’எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,
“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,
தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.
இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,
” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும் போது,
“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
இயக்குநர் பாலாஜி பேசும்போது,
” இயக்குநர் பாக்யராஜ் சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்
தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். “என்றார்.












