இந்தியத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘இராமாயணம்’ (பாகம் 1) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தொடக்க விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த ஜூலை 18, 2026 அன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘பிரதம சங்கல்ப்’ (Pratham Sankalp) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பில் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களான ஸ்ரீ ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதா தேவியாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் புகழ் யஷ் , அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சன்னி தியோல், லக்ஷ்மணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி துபே மற்றும் முக்கிய வேடங்களில் நடிக்கும் அருண் கோவில், விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங், குணால் கபூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், படத்தின் பிரத்யேக 3D டீசர் முன்னோட்டம் திரையிடப்பட்டது. இதனைப் பார்த்த பலரும் படத்தின் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளையும், பின்னணி இசையையும் வெகுவாகப் பாராட்டினர்.
விழாவில் பேசிய இயக்குநர் நிதேஷ் திவாரி,
“ரன்பீர் கபூரின் கண்களில் ஸ்ரீ ராமரின் அமைதியையும், சாய் பல்லவியின் கண்களில் சீதா மாதாவின் ஆன்மாவையும் கண்டதால் அவர்களை இந்த முதன்மைக் கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுத்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நடிகர் யஷ் பேசுகையில்,
“இது இந்திய சினிமாவின் ஒரு பெருமிதமான தருணம். நமது கலாச்சாரப் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துள்ளோம்” என்றார்.
இந்த டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தங்களது அடுத்தகட்ட உலகளாவிய விளம்பரப் பணிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘சான் டியாகோ காமிக்-கான்’ (SDCC 2026) திருவிழாவில் ஜூலை 23 அன்று தொடங்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் முழுவதும் எதிர்பார்க்கப்படும் படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் டிரெய்லர் ஜூலை 24, 2026 அன்று உலகளவில் வெளியாகவுள்ளது.
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசைக் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம், வரும் தீபாவளி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.












