பிரசவத்துக்காக வந்த பெண்ணை கர்ப்பிணி இல்லை என திருப்பி அனுப்பிய மதுரை ராசாசி மருத்துவமனை.

ஒரு நாள்  அல்லது  இரண்டு மூணு நாள் என்றால் பரவாயில்லை.! பத்து மாசமாகவா பாவப்பட்ட யாஸ்மின் என்கிற பெண்ணை ஏமாற்றி இருப்பார்கள்?   நம்ப முடியலிங்க!  யார் மீது குற்றம் என்பதும் தெரியலிங்க. ஆனால் தப்புப் பண்ணினவங்களை  கடுமையாக தண்டித்தே ஆகவேண்டும்! பிள்ளை இல்லேங்கிறதுக்காக காசி ராமேஸ்வரம்னு போறவங்க இருக்கிற நாடு இது. மதுரை விரகனூர் கோழிமேட்டில் யாஸ்மின் என்கிற பெண் போன வருஷம் அக்டோபர் மாதம் மதுரை அரசினர் ராசாசி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறாள்.

             “மவராசி..நீ முழுகாம இருக்கே!” வாய் நிறைய சர்க்கரையை  அள்ளிப்போட்ட மாதிரி செய்தி சொல்லி இருக்கிறார்கள் டாக்டர்கள். ஸ்கேன் பண்ணிப்பார்த்து  மருந்து மாத்திரைகள்.கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை. ஒன்பதாவது மாதம் நெருங்கிய பிரசவ காலத்தில் அதே ராசாசி  மருத்துவமனைக்குப் போனால்….!

          “உன்னை யார் கர்ப்பிணின்னு சொன்னது? நீ கர்ப்பிணி இல்ல” என்று சொன்னால் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடுபட்டிருக்கும்.ஆயிரம் எரிமலை தலைக்குள் வெடித்திருக்காதா? யாஸ்மினை கர்ப்பிணின்னு சொன்னது எந்த டாக்டர்? ஸ்கேன் பண்ணியது யார்? அந்தப் பெண்ணுக்கு என்னதான் நடந்திருக்கு?

கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறாள்  மகராசி.

தப்பான தீர்ப்புக் கொடுத்து கோவலனை கொன்ன நகரமாச்சே!