
“செத்தும் கொடுத்தார் சீதக்காதி”-இதுதான் இந்த நெடுங்கதையின் இரத்தின சுருக்கம்.
நாடக வெறி கொண்ட ஐயா ஆதிமூலம் வறுமையில் வறுபட்டாலும் அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர். சிறந்த நாடக நடிகரான அவரை சினிமா சீர் வைத்து அழைத்தபோது மக்கள் முன் நடிப்பதே மாண்பு என்று மறுத்து விட்டவர்.
நடிக்கும்போதே மேடையில் உயிர் துறந்த அந்த நடிப்பு மேதை மாண்டபிறகு சினிமாவுக்கு எப்படி வாழ்வு கொடுத்தார் என்பதே கதை.!
செத்தவர் எப்படி வாழ்வு கொடுக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு படம் பார்த்தால்புரியும் அவரது ‘ஆன்மா‘வின் வலிமை தெரியும்!
ஐயாஆதிமூலமாக விஜயசேதுபதி. வயது முற்றியவராக! ஒப்பனை வெகு சிறப்பு. பேச்சிலும் நடையிலும் முதுமை.பழுத்த பழமாக தன்னை எச்சரிக்கையுடன் பதிவு செய்திருக்கிறார் சிவாஜிகணேசனின் சாயல் வந்து விடாமல்! வெல் டன் விஜயசேதுபதி.இவரது 2 5 படம் .நடிப்புக்காக வாழ்த்துவோம்.
சிரமப்பட்டு மேக்கப் போட்டு விட்டோமே என்பதற்காக அத்தனை நாடகங்கள் அவசியமா இயக்குனரே! எழுத்து இயக்கம் பாலாஜி தரணிதரன்.
நாடகங்களில் கேட்பது மாதிரியே ஒலிப்பதிவு அமைந்திருப்பதற்குஒலி வடிவமைப்பாளர்கள் அழகிய கூத்தன்,சுரேன் இருவருக்கும் வாழ்த்துகள்
“தனிமை,தனிமை,தனிமை!உண்மைதான்! எனக்கு எவர் மீதும் நம்பிக்கை இல்லை.உண்மைதான்!என் தந்தை என்னை வெறுப்பதைப் போல நான் என் மகனை வெறுக்கவில்லையே”என அவுரங்கசீப்பாக சேதுபதி வருந்தும்போது அவருக்கு கூத்துப்பட்டறை பயிற்சி கை கொடுத்திருக்கிறது.
நாடகம் வேறு சினிமா வேறு என்பதை பிற்பாதியில் காமடியாக சொல்லி இருக்கிறார்கள். கலையை வணிகமாக்கி விட்டனர் என்பதின் ஆதங்கம் இயக்குநர் ராம் வழியாக வெளிப்பட்டிருக்கிறது.
ஆர்வக்கோளாறு நடிகர்களையும் ,ஆணவத்தினால் ஆடுகிற நடிகர்களையும் பிற்பாதியில் வச்சு செய்திருக்கிறார்கள்
.ராஜ்குமார்,சுனில் இருவருக்கும் நல்ல வாய்ப்பு. 3 3 டேக் வாங்குகிறார் ஒருவர். ம்மா என சொல்வதில் கூட சொதப்புகிறார் நடிகனாக மாறிய தயாரிப்பாளர் சுனில்.சூப்பர்.!
களைத்துப் போனவனுக்கு ஒரு தம்ளர் மோர் குடித்த மாதிரி கோர்ட்டு சீன். மனம் விட்டு சிரிக்க முடிந்தது.
“உயிரோடு இருக்கிறவனை வச்சு படம் எடுக்கிறதே தாலி அறுந்துபோகுது , நீ ஆன்மா வந்து நடிக்கிதுன்னு சொல்றியே “என ஒரு தயாரிப்பாளர் புலம்புவது யதார்த்தத்தின் கூப்பாடு! தயாரிப்பாளர் சங்க கூட்டத்தின் லட்சணமே மிக்சர்தானா?யாருக்கு விழுந்த அடியோ!
மவுலி,அர்ச்சனா இருவரும் அனுபவசாலிகள் .நல்ல தேர்வு.
துணிகரமான முயற்சி. ஆனால் ஸ்லோ!












