காஷ்மீரில் காவல்துறை ரகசிய ஆபரேஷன்! 5 தீவிரவாதிகள் கைது!!
ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதி நாடு முழுக்க குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதில், தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், இன்று காஷ்மீரில் காவல்துறை நடத்திய ரகசிய ஆபரேஷன் ஒன்றில், 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்தவர்களான இவர்கள் எல்லோரும் காஷ்மீரின் ஹஸ்ரத்பால் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது பெயர் ஜஜாஸ் ஷேக், உமர் ஹமீது, இம்தியாஸ் அகமது, சாஹில் ப்ரூக், நசீர் அகமது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக இவர்கள் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்களிடமிருந்து 143 ஜெலட்டின் ராடுகள், சைலன்சர் ஒன்று, 42 டெடொனேட்டர்கள், ஐ.இ.டி., வாக்கி டாக்கி மற்றும் சிறு ஆயுதங்கள் ஆகியவை இவர்களிடமிருந்துக் கைப்பற்றப்பட்டன.இது குறித்து உதவி தலைமை ஆய்வாளர், டிஐஜி வி.கே.பர்டி கூறுகையில், தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள், பெரிய அளவிலான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என்றார்.