ரஜினிகட்சிக்கு வரமாட்டேன் ராகவா லாரன்ஸ் பரபரப்பு அறிக்கை!
ரஜினிகாந்த தனது முதல்வர் வேட்பாளர் பற்றி கூறிய கருத்தை , முழு மனதோடு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவரது முடிவை மறு பரிசீலனை செய்யவில்லையென்றால், தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன் என நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது,
“கடந்த வாரம் நான் ஒரு ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எல்லா கட்சியும் உங்களுக்குச் செய்துள்ளது என்றும் அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் நீங்கள் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும், ஏனெனில் மற்றவர்களைத் தவறாகப் பேசும் எதிர்மறை அரசியல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர்.
மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்றும் கேட்கின்றனர்.
இன்று இப்போது இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தலைவர் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
லீலா பேலஸ் ஹோட்டலில் தனது முடிவை அவர் அறிவித்த போது, நான் அவரது முடிவை ஆதரித்து ட்வீட் செய்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படியே உணர்ந்ததாக நினைக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் தலைவரிடம் இதைப் பற்றி நான் பேசும்போது கூட அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.
எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காகச் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.
இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்.
எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது.
நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ…இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.