கமலுடன் சரத்குமார் பேசியது என்ன?பரபரப்பு தகவல்கள்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், ஐஜேகே துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர், இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் விலகி, புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளதாக நேற்று இருவரும் அறிவித்த நிலையில் இன்று இருவரும் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளனர்

.இது குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”வருகிற சட்டசபை தேர்தலில் நல்லவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், கமல்ஹாசனைச் சந்தித்தேன் . ஒரு நல்ல முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் .கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். ஒருவாரத்திற்கு முன்புகூட, அதிமுக கூட்டணியில்தான் சமக இருக்கிறது, கூட்டணி தொடர்கிறது என்று முதல்வர் சொன்னார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் கால எல்லை இருக்கிறது. எங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கும், எங்களின் ஓட்டு விகிதாச்சாரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவகாசமே இல்லாமல் போய்விட்டது. ஓட்டு விகிதாச்சாரம் இருக்கிறது என்பதால்தான் ஜெயலலிதா எங்களுடன் பயணித்தார். மதிப்பு இல்லாவிட்டால் பயணித்திருக்க முடியாது.

ஆனால், இப்போது அந்த மதிப்பு என்ன என்பது தெரியாமல் போய்விட்டது.ஜனவரி மாதம் மண்டலப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, அதிமுகவுடன் இந்த முறை அழைப்பு வராவிட்டாலும், தேர்தலைச் சந்திக்க முடியுமா எனக் கேட்டேன். அவர்களும் அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் முடிவெடுப்போம் எனக் கூறியிருந்தனர்.

எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எவ்வளவு காலம்தான் காத்துக் கொண்டிருக்க முடியும்? அதனால்தான், அடுத்த முடிவுகளை எடுத்தோம்.என் அரசியல் பயணம் தொடரும். மக்களுக்காக நான் பயணிக்கிறேன். நேற்று ஒரு முடிவெடுத்துக் கூட்டணி அறிவித்தோம். அது தொடர்பாக, கமல்ஹாசனிடம் பேசினோம். இவ்வாறு அவர் கூறினார்.