எதற்கும் துணிந்தவனுக்கு மிரட்டலா?
கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய்பீம் படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்
நடிகர் சூர்யாவும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை’ என்று விரிவாக விளக்கம் தெரிவித்திருந்தார்.குறிப்பிட்ட காட்சியும் படத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கையும் வெளியிட்டனர்
இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து, நாளை வெளியாகவுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, வன்னியர் மக்களிடம் மன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் சூர்யாவின் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு எஸ்.ஐ., 5 போலீஸார் பாதுகாப்பு ஏற்கெனவே உள்ளநிலையில் தற்போதும் அது தொடர்கிறது. கூடுதல் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு,பின்னர் கூடுதல் பாதுகாப்புக்கு தற்போது வரை அவசியம் இல்லை என முடிவெடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக் கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.