நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள ‘உத்தமவில்லன்’ படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் , பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உத்தமவில்லன் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைசந்தித்தார்.
‘உத்தமவில்லன்’ படம் என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத படம். இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. இதில் உத்தமனும் நான்தான். வில்லனும் நான்தான். இந்த படத்தை எந்தவொரு நடிகர் பார்த்தாலும், அந்த நடிகரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இது பிரதிபலிக்கும். வில்லுப்பாட்டு இந்த படத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.ரமேஷ் அரவிந்த் என்னிடம் சொன்ன உத்தமவில்லனின் கதை பிடித்துப்போனதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்’ மார்க்கதரிசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரின் நிஜ கேரக்டரை பிரதி பலிக்கிறது.முதலில் அவரை இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டபோது, நிறைய யோசித்து ,நீண்ட தயக்கத்துக்கு பின் தான் ஒப்புக்கொண்டார்.அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை சீக்கிரமாக எடுத்து முடி முடி என்று என்னை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங்கை சீக்கிரமாக முடி என்று அவசரப்படுத்தினார். டப்பிங் முடிந்ததும், படத்தை எப்போது வெளியே கொண்டு வரப்போகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் இந்த படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தார். ஆனால் படத்தை முழுவதும் பார்க்காமலே போய் விட்டார். பாலச்சந்தரின் நிறைய படங்கள் சோகமும், சிரிப்பும் கலந்து இருக்கும். அதுபோல் இந்த படத்திலும் அனைத்தும் கலந்து இருக்கும். சண்டைகள், வன்முறைகள், கார் ஆகாயத்தில் பறப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இல்லை. வைக்கக் கூடாது என்று இல்லை. இந்த கதைக்கு அது பொருத்தமாக இல்லை என்பதற்காகத்தான் வைக்கவில்லை. என் இயக்கத்தில் வெளியான தேவர் மகன்படத்தைப் போன்றே இப்படமும் பேசப்படும் . உத்தம வில்லன் வெளியான பிறகுதான் பாபநாசம் மற்றும் அதே போல் விஸ்வரூபம் 2 வெளியாவது என்பது என்கையில் இல்லை .தாமத்திற்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் காரணம் .அவரைக்கேட்டால் தான் விஸ்வரூபம்-2 வெளியாகும் விபரம் தெரியும் என்கிறார் கமல் ஹாஸன்.