“நீ எதுக்கு நடிக்க வந்தேன்னு சொன்னவங்களும் இருக்காங்க!”

சில விழாக்களில் குறிப்பாக சிலர் கலந்து கொண்டிருந்தால் பங்கேற்பவர்களுக்கு மனக்கதவம் திறந்து கொள்ளும். உள்ளே பதுங்கி இருந்தவை எல்லாம் அருவியாக கொட்டும். எங்கோ இருக்கும்  சிலருக்கு அது தேள் கொட்டாக, தேனீ கொட்டாக வலிக்கலாம்.

‘ஒரு குப்பைக்கதை’ முன்னோட்ட விழாவும் அப்படித்தான் இருந்ததாக  எண்ணிக்கொள்ளலாம்.

வந்திருந்த ஆர்யா அமைதியாகி விட்டார். சிவகார்த்திகேயன் ,அமீர் ஆகியோருடைய பேச்சுக்குத்தான் காத்திருந்தது மொத்த கூட்டமும்!

தாடி மீசை,கலைந்த தலை என்று வந்திருந்தாலும் லேடீஸ் சைடில்  சிவ கார்த்திகேயனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

“சீமை ராஜா படத்துக்கான கெட் அப்தான் இது. லாஸ்ட் செட்யூல் போயிட்டிருக்கு” என்று தனது தோற்றத்துக்கான காரணத்தை சொல்லி விட்டு படத்தின் நாயகனாக மாறி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

“உடல் நோகாமல் இருக்கணும்,உடல் வேர்க்காமல் இருக்கணும்னா  தினேஷ் மாஸ்டரை கூப்பிடுங்கப்பா என்று ஜாலியாக சொல்வேன். எனது டான்ஸ் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இன்று நடிகராகி விட்டார். பலர் பலவிதமாகப் பேசலாம். அதை மைண்ட்ல ஏத்திக்காதிங்க.

சிலர் விஜய் டி.வி. நல்லாத்தானே போயிட்டிருக்கு! எதுக்கு ஹீரோ என்று என்னையும் சிலர் கேட்டிருக்காங்க.

‘நான் ஹீரோவா  இல்லிங்க.விஜய், அஜித்னு பல ஹீரோக்கள் இருக்காங்க. நான் லீடிங் நடிகர் அவ்வளவுதான்னு சொன்னேன். நல்ல கதைகள் இருந்தால் சொல்லுங்க.ஆதரவு தர தயாராக இருக்கிறேன் ” என்றார் சிவகார்த்திகேயன்.

ஃபயர் பிராண்ட் அமீரை கடைசியாக பேச விட்டார்கள்.

“அதில ஒரு வில்லங்கம் இருக்கு அதனாலதான் என்னை கடைசியாக பேச விட்டிருக்கிறார்கள்” என்ற முன்னுரை எழுதி விட்டுத்தான் எச்சரிக்கையை விடுத்தார்.

“இளம் டைரக்டர்களுக்கு சத்யம் தியேட்டரில் பங்ஷன் வைக்கணும் கிற கனவு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த தியேட்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.ஆனால்பகல்  11 மணி ஆகி விட்டால்  ஏசியை ஆப் பண்ணி விடுவார்கள். கூட்டத்தை சீக்கிரமாக முடிங்க என்பதற்கு விடுகிற முதல் எச்சரிக்கை. அதையும் தாண்டி விட்டால்  லைட்டை ஆப் செய்து விடுவார்கள்.

உங்கள் தியேட்டரில் விழா நடத்தவேண்டும் என்கிற ஆர்வத்துடன்தானே வருகிறார்கள். அவர்களுக்காக நீங்கள் உங்கள் படக்காட்சியை அரை மணி நேரம் தள்ளி வைக்க கூடாதா?”என்கிற ஆதங்கத்தை கொட்டினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் வலு போட்ட சத்யம் அமீருக்கு  சாதகமாக இருக்கப்போகிறது?