அந்த காலத்து ஆட்கள் சரோஜாதேவியின் பெயரில் வெளிவந்த இருட்டுப் பத்திரிகைகளைத் திருட்டுத்தனமாக படிப்பார்கள். பிரபலத்தின் பெயரைப் பயன்படுத்தி பச்சை ஆபாசம் பரிமாறப்பட்டிருக்கும். சிற்றின்ப சிற்றிதழ்கள். அச்சிட்டவரின் பெயர் முகவரி எதுவும் இருக்காது, அதே நேரத்தில் மானிட இன்பம்,காதல் என்கிற பெயர்களில் உடலுறவுக் கலை பற்றிய புத்தகங்களும் வாசிக்கப்பட்டன,
முன்னது தடை செய்யப்பட்ட புத்தகம்.
பின்னது அனுமதிக்கப்பட்ட புத்தகம்.
இரண்டுமே அமோக விற்பனை. பச்சை ஆபாச புத்தகத்தை பிளாக்கில் வாங்கிப் படிக்கும் வயோதிக வாலிபர்களும் இருந்தார்கள்.பள்ளிக்கு செல்கிற மாணவர்கள் தங்களின் பாடப்புத்தகங்களில் இச்சையை கிளரும் அந்த சிற்றிதழை மறைத்து வைத்துப் படித்து நாசமாகப் போனார்கள்.
அந்த கதையெல்லாம் இப்போது எதற்கு?
கிருகலட்சுமி என்கிற மலையாள இதழ் ஒன்று தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி கட்டுரை எழுதி இருந்தது. அதன் அட்டையில் ஒரு பெண் அவரது ஒரு பக்கத்துத் திறந்த மார்பில் மழலைக்கு பால் புகட்டுவது போல் ஒரு படம்.
இது ஆபாசம் சின்னஞ்சிறு பிள்ளைகளின் மனதை கெடுத்து விடும் என ஒருவர் வழக்குப் போட்டிருந்தார், அட்டையில் இருந்த பெண் மணமாகாதவள் மாடல் அவள் எப்படி பால் கொடுக்க முடியும் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். கஜுராகோ சிற்பங்கள் பார்க்காதவர்கள் போலும்.!
தற்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது,
ராஜாரவிவர்மாவின் ஓவியம், வாத்சாயனர் காவியம் இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது மற்றவர்களுக்கு கலையாகத் தெரிகிறது என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.