பெரிய தலைக்கட்டு குடும்பத்தில் குடும்பத் தலைவர் இறந்து விட்டால் வாரிசுப் பிரச்னை வாட்ட ஆரம்பித்து விடும். குடும்ப உறுப்பினர்களே தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் கட்சியில் அப்படியொரு நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
ஜனநாயக அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட வாய்ப்பில்லை.
பலம், பணம் ,செல்வாக்கு இவைகளுடன் இருந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து விலகிச்சென்றாலும் திமுக அழிந்து விடவில்லை.
கலைஞர் மிகவும் கட்டுப்பாட்டுடன் கழகத்தை வளர்த்திருக்கிறார். அவரது மறைவைப் பயன்படுத்தி உளவுத் துறை வழியாக திமுகவை பிளக்கும் முயற்சியில் ஆளும் கட்சிகள் இறங்கலாம். கலைஞர் திமுக என்கிற பெயரில் அவர்களே ஒரு அமைப்பை பொய்யாக அமைத்து அதற்குள் சிலரை இழுத்து விடப் பார்க்கலாம்.
ஆனால் கழகத் தொண்டர்கள் ஸ்டாலின் பக்கமே வலுவாக நிற்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்டக் கழகங்களும் தலைவர் பதவிக்கு ஸ்டாலினையே ஒரு மனதாக ஏற்பதாக தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
பொதுக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அழகிரிக்கு செல்வாக்குள்ள மதுரை மாவட்டம், நகரம் இரண்டும் ஸ்டாலின் பக்கமே இருக்கின்றன. தலைவரால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அழகிரி என்கிற உணர்வு அவர்களிடம் அழுத்தமாகவே இருக்கிறது.