படத்தைப் பாருங்கள்.
அந்த அழகிய இளைஞன் முகத்தில் சாதி இருக்கிறதா, அந்தப் பெண்ணின் முகத்திலாவது சாதி எழுதப் பட்டிருக்கிறதா?
இல்லை..இல்லவே இல்லை.!
இருவருமே அழகானவர்கள்.
பிரணய் ,அம்ருத வர்ஷினி பள்ளிப் பருவத்திலிருந்து ஒன்றாகப் படித்து பழகி வந்தவர்கள். அவள் பருவம் அடைந்தும் கல்வி தொடர்ந்தது. பிரணய்யும் தொடர்ந்தான்.
தொடக்கத்திலிருந்து சிக்கல்தான்!
“அவன் தாழ்த்தப்பட்டவன். அவனுடன் பேசுவதோ, பழகுவதோ கூடாது.” என்கிற உத்திரவு பிறப்பிக்கிறார் அப்பா மாருதிராவ் .
மனம் அவளுடையது. அது என்ன சொல்கிறதோ அதை கேள் என்கிறது அவளது பகுத்தறிவு. படித்தவள், நாலும் தெரிந்தவள் . நாளைய வாழ்க்கை அவளுடையது. கண்ணுக்குத் தெரியாத சாதிக்காக அவள் ஏன் அவளுக்குப் பிடித்த அன்பனுடன் பேசாமல் இருக்கவேண்டும்?
இருவருமே தடையை மீறினார்கள் .கல்யாணமும் சட்டப்படி செய்து கொண்டார்கள். அப்பா மாருதிராவும் சித்தப்பா ஸ்ரவன்குமாரும் கடுமையாக எச்சரித்தார்கள்.
கண்ணுக்கு முன்பாக இருந்தால் தானே கரைச்சல். கண்டனங்கள்.மிரட்டல்கள் .
தூரமாகப் போய் விட்டால்.?
அப்படித்தான் அந்தச் சின்னஞ் சிறிசுகள் விலகி சென்றன. அம்ருதவர்ஷினி தாயாகிறாள்.வயிற்றில் ஐந்து மாதக் கரு.
கணவனை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். சோதனை செய்து கொள்வதற்காக.
பின்னால் வந்தவர்கள் பிரணய்யை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.
கொதித்துப் போய்விட்டாள் மனைவி!
“எனது கணவனைத் தொடுவதற்கு அவர்கள் யார்? எங்களை வாழவிடாமல் தொடர்ந்து தொல்லைகளைத் தந்த எனது அப்பா மாருதிராவ் சித்தப்பா ஸ்ரவன்குமார் இருவருக்கும் மரணதண்டனைதான் வழங்கப் படவேண்டும் “என கூறி இருக்கிறாள்.
ஆந்திரா மட்டுமின்றி இந்திய அளவில் பெண்கள் அமைப்புகள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கின்றன.