“சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் போகலாம்” என்கிற நீதிமன்ற தீர்ப்புப் பற்றிதான் தற்போது நாடு பரபரப்பாக பேசுகிறது.
பெட்ரோல் விலை ஏற்றம் பற்றியோ, ரபேல் விமான ஊழல் பற்றியோ ,பாலியல் வன்முறை பற்றியோ…. கவலைப்படவில்லை.
எல்லாவற்றையும் மறந்து நீதி மன்றத் தீர்ப்புப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
“பெண்கள் சபரிமலை போனால் புனிதம் கெட்டுவிடும் .இந்து தர்மத்துக்கு எதிரானது “என ஒரு சாராரும் “இல்லையில்லை. தெய்வ சன்னிதியில் ஆணென்ன, பெண்ணென்ன இருவரும் சமமே “இன்னொரு சாராரும் பேசுகிறார்கள்.
விஜயசேதுபதி என்ன நினைக்கிறார்?
“எனது அம்மா புனிதமானவர், என் மனைவி புனிதமானவர், எனது சகோதரி புனிதமானவர் என நான் நினைக்கிறேன்! ” என தனது கருத்தை நச்செனப் பதிவு செய்தார். அதற்குள் அடங்கிவிட்டது அவரது கருத்து.
“அப்பனும் அன்னையுமே உலகம்” என சிவ பார்வதியை சுற்றி வந்த கணேசனின் பதில் போல என்று சொல்லலாம். (கணேசன் அப்படி சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு ?)
’96 ‘ படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்த விஜய சேதுபதியிடம் வாதாடியபோது கிடைத்த பதில்தான் முதலில் படித்தது.
“96 படத்தின் பெயர்க்காரணம் கூறுக?”
“96-ம் வருடத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் கெட் “டுகெதர்”தான் கதை.இருபது வருஷம் கழிச்சு சந்திக்கிறார்கள். இதில் நான் டிராவல் போட்டோ கிராபராக நடித்திருக்கேன்.”
“பள்ளிக்கூட மாணவனுக்காக உடல் எடை எதுவும் குறைச்சிருக்கிங்களா? ”
“அதெல்லாம் இல்லிங்க.!எடையைக் குறைச்சிட்டா வயசு குறைஞ்சிரும்கிறது எந்த ஊரு ஞாயம்? சின்ன வயசு கேரக்டர்ல எம்.எஸ்.பாஸ்கர் அண்ணனின் மகன் ஆதித்யா நடிச்சிருக்கான்.”
“நீங்க யாரையும் மனசில வச்சிக்கிட்டு சொல்லலியே?”
“உலகத்தை நினைச்சி சொன்னது!”
“நயன்தாரா,திரிஷா,தமன்னா இவர்களில் யாருடன் நடிக்கிறபோது ‘டப்’ பாக இருந்தது?”
“அவங்க மூணு பேருமே சின்சியர் ஆர்ட்டிஸ்ட். அவங்க வெறும் கிளாமர் டால்ஸ் இல்ல.நாலட்ஜ் இருக்கு, சின்சியாரிட்டி இருக்கு, திரிஷா முப்பது வருசமா பீல்டில் இருக்கிறாங்கன்னா…இது சாதாரண விஷயம் இல்லிங்க,!”
“உங்களுடைய சக போட்டியாளர் யார்னு நினைக்கிறீங்க?”
“ஏன் நினைக்கணும்? ஒருத்தரை போட்டியாளராக நினைச்சா நம்ம சிந்தனை அடிபட்டுப் போகும். அவருக்கு தெரிஞ்ச வித்தைகள் என்னவா இருக்கும்னு மண்டையைப் போட்டு குடையணும்.அவர் என்ன ஆயுதம் வச்சிருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு நாம்ம ஒரு ஆயுதம் தயார் பண்ணனும். எதுக்கு இதெல்லாம்.? இயல்பா நடிச்சிட்டுப் போகவேண்டியதுதானே!”
“காதல்?”
“நாம் இயங்குவதே காதலினால்தான்.! குடும்பக் கட்டமைப்பு காதலால்தான் இருக்கு! பழைய காதலை நினைத்துப் பார்ப்பதும் ஒரு சுகம்தான்! நான் காதல் திருமணம் செய்தவன்,!”
“மணிரத்னம்,ரஜினிகாந்த் இவர்களுடன் பணியாற்றியது?”
“இவங்களுடன்லாம் வேலை பார்ப்பமான்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்லை. காட்டாற்று வெள்ளத்தில் பயணம் செய்தது மாதிரியான அனுபவம். ஆற அமர சீன் பிடித்து மணிசார் வேலை செய்வார்னு நினைச்சு செட்டுக்குப் போனால் மின்சாரம் மாதிரி வேலை பார்க்கிறார்.ஜீனியஸ்.
ரஜினிசார் ஆன்மிகவாதி. நானும் பிளாசிபகளா என் பாணியில் கடவுளைப் பத்திப் பேசுவேன்.அவரிடம் ரொம்பவும் ஒட்டுதலா இருந்திட்டால் அவரை மாதிரியே நாமும் மாறிடுவோமோன்னு தோணும். அதனால் எட்டி நின்னு பிரமிப்பா பார்ப்பதும் ஒரு சுகம்தான்!”
“விமர்சனங்கள்?”
“சில சமயம் சிரிப்பு வரும். இன்னும் சில அதுதான் அவங்க மைலேஜ் என்பதை புரிந்து கொள்வேன். விமர்சிப்பது உங்கள்கடமை. அதை படிச்சு திருத்திக் கொள்வேனா இல்லையா என்பது எனது தனி உரிமை!”
“உங்கள் வீட்டுக்கும் வருமானவரி ரெய்டு?”
“அது ரெய்டு இல்லிங்க.அது சர்வே.!”என்றார் விஜயசேதுபதி.