நோட்டா (விமர்சனம் )

உலக மகா ஊழல் மன்னன் கதைகளையெல்லாம் உருட்டித் திரட்டி உள்ளங்கையில் லேகியமாக காட்டவேண்டிய தமிழ் நாட்டில் நடப்பு அரசியலை காட்டுவதற்கும் தைரியம் வேண்டுமல்லவா?
ஆரம்பமே அட்ராசிட்டி தான்.
முதல்வர் நாசர், தார்ப்பாய் சுருட்டி. இவர் பண்ணிய கோல்மால் ஊழல்களை கண்டு பிடித்த சிபிஐ அவரை சிறையில் தள்ள முடிவெடுத்த நிலையில் ஆட்சி தனது பிடியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு டம்மியை சி.எம். ஆக்குகிறார் நாசர். அந்த டம்மி அவரது புத்திர சிகாமணியே!
பையன் லண்டன் ரிட்டர்ன். ஆட்டம், பாட்டம்,பெண்களுடன் குடி கும்மாளம்,லாங் டிரைவ் என ஜாலியாகத் திரிகிற தேவரகொண்டா!
வேண்டா விருப்பமாக முதல்வர் பதவியை ஏற்றாலும் காண்டா மிருகம் மாதிரி ஒரு பிள்ளையைப் பெறவேண்டாமா?அதிரடியாக இறங்கியவர் அதன்பின் நடக்கும் அசம்பாவித சம்பவங்களால் வெகுண்டெழுகிறார்.,
சமூக சேவையில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் பத்திரிகையாளர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் மெஹ்ரீன் உதவியுடனும் விஜய் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல முயற்சிக்கிறார்.அவரின் முயற்சி பலித்ததா? இல்லையா? என அதிரடி, சரவெடியாக விரியும் மீதிக்கதையே, சுவாரசியமான படம்.!
ஆந்திராவில் வாரிசு நடிகர்களின் மத்தியில் ‘தனி’ கெத்து காட்டி வரும் விஜய் தேவர கொண்டா, அதே ‘கெத்’தை தமிழகத்தின் முன்னணி கதாநாயகர்கள் மத்தியிலும் காட்ட முயற்சித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
தெலுங்கு வாடை இல்லாமல் டப்பிங் பேசியுள்ள விஜய்தேவரகொண்டாவுக்கு ஆள் உயர மாலை அணிவித்துப் பாராட்டலாம்.
கவர்னர்மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவுக்கு பின் நடக்கும் விருந்து நிகழ்வில், கவர்னரிடம், “நைட் அடிச்சது இன்னும் தெளியல,ஸோ, டீ-காபி வேண்டாம் மோர்… பெட்டர் என கேட்கும் இடத்திலும்,பேருந்தில் எரித்து கொல்லப்பட்ட குழந்தையின் தாயிடம் ஆறுதல் சொல்லமுடியாமல் மனிதர் பொங்கும் இடத்திலாகட்டும்,பத்திரிகையாளர் கள்மத்தியில் பேட்டியளிக்கும் போது , சூழல் புரியாமல் எழும் சலசலப்பை அடக்க’ ஏய்’என்ற ஒற்றைக்குரலில் அடக்குவதிலாகட்டும் சி.எம். ஜொலிக்கிறார்.விஜய் தேவரகொண்டாவின் ஆலோசகராகவும் நேர்மையான பத்திரிகையாளர் மகேந்திரனாகவும் சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார்.
இடுப்பே ஒடிந்து விடும் அளவுக்கு கூனிக்குறுகி கூழைக் கும்பிடு போடும் எம்.எல். ஏக்களை பார்த்து ,கொஞ்சம் நிமிர்ந்து பழகுங்கடா… என தனி கெத்தோடு மிடுக்கான தோரணையில் நாசர் வழக்கம் போலவே நடிப்பில் மிரட்டுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசாக வரும் (கயல்) சஞ்சனா முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார்.செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சம்பவம், கூவத்தூரை நினைவு படுத்தும் வகையில்,ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது, சென்னை வெள்ளச் சம்பவத்தில் நடந்த ஸ்டிக்கர் மேட்டர்,என பல நிகழ்வுகளை இயக்குனர் ஆனந்த் சங்கர் துணிச்சலுடன் தோலுரித்து காட்டியுள்ளார்.
நட்புக்காக ஒரே ஒரு காட்சியில் வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கவனிக்க வைக்கிறார்.
முதல்வரின் கைத்தடியாக வரும் எம் எஸ்.பாஸ்கர் தனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை ஒ.கே. “நோட்டா” எனும் படத்தலைப்பு சம்பந்தமாக படத்தில் ஒரு காட்சி கூட இல்லாதது ஏமாற்றம்.ஒளிப்பதிவு சிறப்பு. “நோட்டா’ – பார்க்கலாம்
3/5 மதிப்பெண்கள்.
Related Posts