“ராஜினாமா வாபஸ் இல்லை!” பாக்யராஜ் உறுதி.!

சர்கார் திருட்டுக்கதை என சொல்லப்பட்டதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை விட்டு ‘விலகச்சொல்லி’ நிர்பந்தப்படுத்தி இருக்கிறார்கள் .அதனால்தான்  பாக்யராஜ் ராஜினாமா  கடிதம் கொடுக்க நேரிட்டது என்பது ஒரு சைடு செய்தி.

“இல்லை இல்லை சில கார்ப்பரேட் நிறுவனங்களின் அச்சுறுத்தலே காரணம்.  ‘ ‘ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”என பாடிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசான பாக்யராஜையே மிரட்டி விலக செய்கிறார்கள் என்றால் ,கோலிவுட் எங்கே செல்கிறது?”என்பது இன்னொரு பக்கம் சொல்லுகிற சேதி.

புகார் கொடுக்கிறார் ஒருவர், அது  விசாரிக்கப்படுகிறது பிரச்னை சிக்கலுக்குள் மாட்டாமல் இருப்பதற்கு பஞ்சாயத்தார் ஆலோசனை சொல்கிறார். “இல்லை நான் அசல்தான்.கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்”என வீராவேசம் கொண்டவர் கோர்ட்டு படியேறியதும் “சமரசம்”என சரண்டர் ஆகிறார். இதற்காக பஞ்சாயத்தாரை பலி கேட்கலாமா? என சிலர்  நியாயம் பேசுகிறார்கள்.

இப்படியெல்லாம் பல திசைகளில் இருந்தும் கேள்விகள் ?பாக்யராஜிடமே கேட்கலாம்.

“மிரட்டப்படுகிறீர்களா, உண்மையா?”

“ஐய்யயே …அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.”

“அப்படியானால் ஏன் ராஜினாமா?”

“சங்கத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே ராஜினாமா,. விலகல் கடிதத்தை நான் திரும்பப்பெறப் போவதுமில்லை.இதில் உறுதியாக இருக்கிறேன்.

சங்கத்தின் ஆலோசனையை கேட்காமல் கோர்ட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ளலாம் என்றால் சங்கம் எதற்கு?

சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் சங்கமே கோர்ட்டுக்கு போகவேண்டும். வறுமையில் வாடுகிற எழுத்தாளன் செலவு பண்ண முடியுமா?

ஆக, இதெற்கெல்லாம் தீர்வு காணுகிற வகையில் பல திருத்தங்கள் செய்யவேண்டும். அதற்கு சங்கச் சட்டங்களில் மாறுதல் செய்ய வேண்டும் .அதற்கு புது அமைப்பு வந்தால்தான் சாத்தியம். அதனால்தான் ராஜினாமா செய்திருக்கிறேன்.”என்கிறார் பாக்யராஜ் .

செய்யுங்கள் அதை முதலில்.!