நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த 9 ம் தேதி வெளியானது. இப்படத்தில், காசு இருந்தா ஜெயில்ல இருந்து கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது.இது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தான் குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெய்குமாருடனான சந்திப்பு ஒன்றில் தர்பார் சர்ச்சை வசனம் குறித்து கேட்டபோது, பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள் ஆனால் தற்போது சிறைச்சாலை வரை பாய்ந்திருக்கிறது பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற சமூக விரோத கருத்தை எதிர்க்கும் வகையில் உள்ள இந்த வசனத்தை வரவேற்கிறேன் என்றார்.இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், ‘தர்பார்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ரஜினி மீதும் இயக்குனர் முருகதாஸ் மீதும் வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்.நேற்று மாலை தர்பார் பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது சமூக வலைதளத்தில்,வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சிறையிலிருந்து கைதிகள் வெளியே செல்வது குறித்த வசனம் பொதுவானதுதான். தனிநபர் யாரையும் குறிக்கவில்லை. இருப்பினும், இந்த வசனம் சிலரது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக தெரியவந்ததால், அந்த வசனங்கள் நீக்கப்படுகிறது என கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த வசனம் குறித்து, திருச்சி திருவெறும்பூரில் மக்கள் நீதி மையம் கட்சியின் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள்,’தர்பார் படத்தில் இடம்பெறும் சசிகலா குறித்த சர்ச்சை வசனம் குறித்து கேட்ட போது, பராசக்தி காலத்திலிருந்தே கருத்துரிமை பிரச்சனை உள்ளது. தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கபடுவதும் ஒரு ஷாப்பிங் தான்.
மக்கள் நீதிமய்யம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது வருத்தம் அளிக்கவில்லை .தமிழக அரசியலில் வெற்றிடம் என்று ஒன்று இல்லவே இல்லை. மக்கள் மனதில் இடம் உள்ளது. அதை பிடிப்பது யார் என்பதே கேள்வியாக உள்ளது. அடுத்த வருடம் வரவுள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்