1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையும் அதுதான்.
அந்தத் தருணத்தைப் பதிவு செய்யும்விதமாக பாலிவுட்டில் ‘1983 வேர்ல்டு கப் ’ என்கிற பெயரில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகர் ‘ரன்வீர்சிங்’ கபில்தேவாக நடிக்கிறார். இவருடன் அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் ஜீவா பேசும்போது, “நான் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன். பள்ளி, கல்லூரி காலங்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஜெயித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்பந்தமான படம் என்று நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. படத்தின் ஷூட்டிங்கிற்காக எப்போது காமிரா முன்பாக நிற்போம்ன்னு துடித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த ‘1983 வேர்ல்ட் கப்’ மல்டி ஸ்டார்ஸ் மூவி. ‘பாகுபலி’ எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ. அது மாதிரி இந்த படமும் இருக்கும். படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் மேல் இருக்கும்.
1983-ம் வருடத்தில் இந்தியா உலகக் கோப்பை போட்டியை ஜெயித்து பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள்தான் படத்தின் கதைக் களம்.
அப்போது நமது இந்திய அணியில் இருந்த தமிழகத்தின் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.
2019 மே மாதம் படத்தின் ஷுட்டிங் லண்டனில் துவங்குகிறது. கிட்டத்தட்ட 100 நாட்கள் ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. அதற்காக பிரபலமான பெளலரான சந்து என் வீட்டுக்கே வந்து எனக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.இன்னும் பயிற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்கிறார்.