சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வியாபாரிகள் இறந்ததை கண்டித்து இன்று (24ம் தேதி) ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக 2 எஸ்ஐக்கள், தலைமை காவலர் முருகன், போலீசார் முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.2 வியாபாரிகள் சாவு குறித்து தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை ஏடிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேேபால, மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி விசாரணை செய்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளுடன் 8 வாரத்திற்குள் விரிவான அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் இச் சம்பவத்தை கண்டித்து மக்கள்நீதி மய்யக்கட்சியின் தலைவரம் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,”உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.” என பதிவிட்டுள்ளார்.