சசிகலா விடுதலையாவதற்கு காங்.கட்சி கடும் எதிர்ப்பு.!

1430 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா மீதும் அவரது உறவுகள் மீதும் வருமானவரி துறையினர் வழக்குப்பதிவு செய்ததெல்லாம் பழங்கதை.

அவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஒரு முதலமைச்சருக்கு தோழியாக இருந்தாலே போதும், இந்த அளவுக்கு சொத்து திரட்டலாம் என்பதற்கு நல்ல உதாரணம்தான் சசிகலா. 

புண்ணியவதி ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு யார் காரணம் என்கிற விசாரணைக் கமிஷன் அது தன்வழியில் அமைதியாகப் போகிறது. எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன  என்கிற ரீதியில் தமிழக அரசும் போகிறது. உயிர் இருந்தவரை அம்மா. உயிர் போன பின்னர் சும்மா. ஒரு போட்டோவை மட்டும் டேபிளில் வைத்துக்கொண்டால் போதும். சட்டைப்பையில் ஜெ படம். இது நன்றாக பளிச்சென தெரிகிற மாதிரி நைஸ் வெள்ளை  சொக்கா.

இப்போது வருமானவரி இலாகா வசம் சசிகலா அன்ட் உறவுகளின் சொத்து இருக்கிறதாம். 65 என்கிறார்கள். போயஸ் கார்டனில் ஜெ.வீட்டுக்கு எதிராக பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த வீட்டையும் கைப்பற்றி விட்டதாக சொல்கிறார்கள்.ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்ததும் இந்த புதிய வீட்டில்தான் சசி தங்கப் போவதாக சொன்னார்கள். 

தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னர் சசிகலாவை விடுதலை செய்வதற்கு பெங்களூரு காங்.கட்சி எதிர்ப்புத் தெரிவித்து அந்த மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. சிறைச்சாலை விதிகளை மீறி ஜாலியாக பெங்களூரு வீதிகளில் ஷாப்பிங் செய்தது ,இன்னும் பல முறைகேடுகளை செய்தது தொடர்பாக நடந்த விசாரணையை எடுத்துக் காட்டி கடிதம் எழுதியிருக்கிறார்கள்.