
நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஏ.பி.சாஹுக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து, நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்தது. இருப்பினும் நீதித்துறை குறித்து சூர்யா பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நீதித்துறை குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,”இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஐகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
