சம்சாரம் அது மின்சாரம் 2-ம் பாகம் உருவாகிறது! -விசு கதாபாத்திரத்தில் ராஜ்கிரண்!!

கடந்த 1986 -ல் மறைந்த இயக்குனர்,கதை வசனகர்த்தா, நடிகர் விசு இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும், தேசிய விருதையும் பெற்ற திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களுக்கு பிறகு மறைந்த இயக்குனர் விசு கடைசியாக கதை வசனம் எழுதியுள்ள சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம்பாகம் திரைப்படமாகிறது.
இப்படத்தை மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார். இந்நிறுவனம் ஏற்கனவே விமல் நடிக்கும் எங்க பாட்டன் சொத்து, யோகி பாபு நடிக்கும் உலகமகா உத்தமர்கள், பா விஜய் இயக்கத்தில் ஜீவா அர்ஜுன் நடிக்கும் மேதாவி போன்ற படங்களை தயாரித்து வருகிறது. சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம் பாகத்தை மறைந்த விசுவின் உதவியாளர் வி எல் பாஸ்கர்ராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக இயக்குனர் விசுவின் மகள் லாவண்யா விசு பணியாற்றுகிறார். இப்படம் குறித்து இயக்குனர் வி எல் பாஸ்கர் ராஜ் கூறுகையில்,” இப்படம் முதல் பாகத்தை போலவே சிறுவர்கள்,இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ரசிக்கக்கூடிய கதம்பமான குடும்பகதையாக உருவாக உள்ளது.அனைத்து தரப்பு மக்களையும் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொருவரின் வீட்டில் மின்சாரமாக இருக்கும் சம்சாரத்தின் கதை . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ராஜ்கிரணி டம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு; ராஜவேல் மோகன் இசை;பரத்வாஜ் .