சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன்?-டி.ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை!
வருகின்ற 20211 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்பது குறித்து இயக்குனரும் லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தலைவருமான டி .ராஜேந்தர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா காலத்திலிருந்து தொடங்கி, இன்னாள் துணைமுதல்வர், அண்ணா திமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என் நீண்ட நாள் நண்பர் ஆவார்.
நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதற்கு முன்பு ஓபிஎஸ் என்னை அழைத்தார். சென்றேன், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கையில் பூங்கொத்து ஒன்றை தந்தேன். கண்ணியமாய் விடைபெற்று வந்தேன். மறைந்த முதல்வர் அம்மா இல்லாமல் அண்ணா திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்றத் தேர்தல் களம. இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணி என்று சேர்ந்திருக்கிறார்கள் பக்கபலம.
அதைத் தவிர அவர்கள் இடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப் போகிறது பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை.ஒருவருடைய வாக்குவன்மை அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள். அது ஒரு காலம். கொள்கையை சொல்லி ஓட்டு கேட்ட தெல்லாம் அந்த காலம்.
கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கி கொள்ளலாம் என்பது இந்த காலம் .காலமும் சரியில்லை. களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டேன். போதாதற்கு இது கொரோனா காலம். பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ளவேண்டும் முகமூடி. பக்குவ பட்டவனாய் வாழவேண்டும் என்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி.
இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் டி ராஜேந்தர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்