உள்ளாட்சித் தேர்தல்:கமலஹாசன் பரபரப்பு பேச்சு!
28 வது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடும் விதமாக ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ இணைய கருத்தரங்கத்தினை மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தியது.கட்சியின் தலைவர் கமல் ஹாசனின் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் செந்தில் ஆறுமுகம், பேராசிரியர் க.பழனிதுரை, முனைவர். கூத்தம்பாக்கம் இளங்கோ, கேரள மாநிலம் KILA அமைப்பினைச் சேர்ந்த மருத்துவர் ஜாய் எலமான், முனைவர் வி. பொன்ராஜ், ஜனகிரஹா அமைப்பினைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் அளவில்லி, நல்லோர் வட்டம் பாலு ஐயா, விருத்தாச்சலம் முனிசிபல் சேர்மன் மருத்துவர் வள்ளுவன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது,”உள்ளாட்சி நிர்வாகமுறைமையை உலகிற்கே எடுத்துச் சொன்னவர்கள் நம் சோழர்கள் என்று இன்று நாம் பெருமையுடன் மார்தட்டிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறோம். மருத்துவமனை கட்டிக்கொண்டிருக்கும்போதே கண் முன்னே இடிந்து விழும் சூழலில், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது நாங்கள்தான் என்பதில் பெருமை இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளை எப்படியெல்லாம் பலப்படுத்த முடியும். என்னவெல்லாம் ஓட்டைகள் இருக்கின்றன. அதை அடைக்கும் வழிமுறைகள் என்ன என்பதைச் செயலில் காட்டியவர்கள் இங்கே பேசி இருக்கிறார்கள். மாற்றம் என்பது சொல் அல்ல செயல். செயலுக்கு நேர்மை வேண்டும். நேர்மைக்கு வீரம் வேண்டும். வீரமும் நேர்மையும் ஒட்டிப்பிறந்தவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
பல விஷயங்களில் மக்கள் பங்கேற்பு குறைவாக உள்ளது என்பதை நான் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் போது கண்டேன். ஜனநாயகம் என்பது மோனாலித்திக் கட்டுமானம் அல்ல. ஒருமுறை உருவாக்கி விட்டால் போதும் அப்படியே இருக்கும் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக கண்காணித்தால்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும்.அதையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துக்கொள்வது ‘எல்லாவற்றையும் அப்பா பார்த்துக்கொள்வார் என கருதிக்கொள்ளும் 12 வயது பையனின் மனோபாவம்’. நமது ஜனநாயகத்தை நாம்தான் கண்காணிக்க வேண்டும்.
Related Posts
நான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் உள்ள 19 வார்டுகளில் மூன்று வார்டுகள் மிக மோசமான சூழலில் உள்ளன. கல்லுக்குழி, அம்மன்குளம், கோட்டை மேடு போன்ற பல குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழல் நிலவுகிறது. அவர்களது குடியிருப்புகளைச் சுற்றி வசிக்கும் பண வசதி படைத்தவர்கள் சிறிது மனம் வைத்தால் கூட இவர்களது வாழ்க்கைச் சூழலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். அதை நோக்கிய முயற்சிகளில்தான் நான் ஈடுபட்டுள்ளேன்.
கிராமசபைகளை மக்கள் நீதி மய்யம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இன்று கிராம சபைகளின் முக்கியத்துவத்தைக் கடைக்கோடி மனிதர்கள் வரை கொண்டு சேர்த்திருக்கிறோம். அதுபோலவே நகர சபை, வார்டு சபைகளையும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும். ஓடிசாவில் நடைமுறையில் இருக்கும் ‘ஸ்லம் சபா’ ஒரு சிறப்பான செயல்முறை. குடிசைப்பகுதிகள் நிறைந்த தமிழகத்திலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாகச் செயல்படும் என்பதில் மாற்றமில்லை. ஒரு பிரச்சனையைப் பற்றி பத்திரிகையில் நடுப்பக்க கட்டுரை எழுதிவிட்டால், அது தீர்ந்துவிடும் என்று வாளாவிருக்க முடியாது.
பொதுகாரியங்களில் கேரள மக்களின் பங்கேற்பினை வியக்காமல் இருக்க முடியவில்லை. விமான விபத்து, பேரிடர் என எது நிகழ்ந்தாலும் அரசு வருவதற்கு முன்பே மக்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து களத்தில் குதித்து விடுகிறார்கள். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்களும், மக்கள் பங்கேற்புள்ள உள்ளாட்சி கட்டமைப்பும்தான் இதற்குக் காரணம்.
இன்னமும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதை நடத்திக் கொடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அதை நாம் தொடர்ச்சியாக ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது”.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்
இந்நிகழ்வினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் (ஓய்வு) தொகுத்து வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள், ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாக மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.