அநியாயமாக உயிரிழப்புகள் நிகழ்கின்றன என்றால் நெருங்கிய உறவுகளின் நெஞ்சங்கள் வெடித்து சிதறுவது இயல்புதான்.!
நடிகை மீரா சோப்ராவின் குடும்பத்தில் இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் .கொடிதிலும் கொடிது கொரானாவினால் இனிய உயிர் பறி போவது.!
பிரியங்கா சோப்ராவின் தங்கை மீரா சோப்ரா.
கொரானாவின் இரண்டாவது அலை வீச்சின் வீரியத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புனித பாரதத்தில் மட்டும் உச்சம் .புண்ணிய நதிகளில் பிணங்கள் மிதந்து போவது இங்கு மட்டும்தானே!
இந்த வீச்சில் திரைத்துறையினர் அதிக அளவில் பலி ஆகிறார்கள்.இயக்குநர் ,நடிகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட அருண் காமராஜாவின் அன்பு மனையாள் உயிருடன் இல்லை.வளர்ந்து வந்து கொண்டிருந்த நிதிஷ் வீரா பலியாகிவிட்டார். என்ன கொடுமையடா இது!
தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவரை இழந்துவிட்ட நடிகை மீரா சோப்ரா கோபத்தின் உச்சம் சென்று விட்டார்.
“எனது உறவினர் நேற்று பெங்களூரூவில் இறந்திருக்கிறார். ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு உயிர் போராட்டம். கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவோ முயன்றும் ஒரு ஐ.சி.யூ படுக்கையைக் கூட பெற முடியவில்லை. அவருக்கு மிகவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு படுக்கை கிடைத்த நேரத்தில் நுரையீரல் செயலிழந்து போனது..
இது மரணமா இல்லை கொடூரமான கொலையா?
நம் அரசாங்கமும் மருத்துவர்களும் கையாளாகாமல் போனதால் தான் அவர் இறந்தார்.” என்று கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி பதிவு செய்திருந்தார்.
இந்த மே 5-ம் தேதி அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில் “எனது இன்னொரு உறவினர் இன்று கொரோனாவால் இறந்துவிட்டார் . கடந்த ஒரு வாரத்தில் எனது குடும்பத்தில் 2 கொரோனா மரணங்களைப் பார்த்துவிட்டேன்.
உண்மையைச் சொன்னால் நான் ஒருபோதும் இந்தளவிற்கு கையாள் ஆகாதவளாக உணர்ந்ததில்லை.
மனமும் உடலும் உணர்ச்சியற்றவையாகிவிட்டதால் கோபம் கூட மறைந்துவிட்டது. இன்னும் எத்தனை மரணங்கள்?
இந்தியா நாய்களின் கையில் சென்றுவிட்டது என்று நான் சொல்கிறேன்” என்று காட்டமும் கடுங்கோபமும் கொண்டு குமுறி இருக்கிறார்.
“நான் மருத்துவமனையில் ஒரு படுக்கையையோ அல்லது சுவாசிக்க மற்றும் உயிர்பிழைக்க ஆக்ஸிஜனையோ பெறமுடியாதபோது 18% ஜிஎஸ்டி செலுத்த விரும்பவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.