முருங்கைக்காய் சிப்ஸ் : விமர்சனம்.

சாந்தனு, அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தினை ஶ்ரீஜர் இயக்கியிருக்கிறார். ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ ரவீந்தரன் தயாரித்துள்ளார்.

சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் திருமணம் முடிந்த நிலையில் அதன் அடுத்த கட்டமான சாந்தி முகூர்த்தத்துக்கான சடங்குகள் தொடங்குகிறது. இந்நிலையில் சாந்தனுவின் தாத்தா கே.பாக்யராஜ் சாந்தனுவிடம் ‘உடலுறவில் ஈடுபடக்கூடாது’. என சொல்லி சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதே நேரத்தில் அதுல்யா ரவியின் நெருங்கிய உறவினரான ஊர்வசி, இன்றைக்கு உடலுறவில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் குழந்தை பாக்யம் என்பது இனி கிடைக்காது. இது நமது குடும்பத்தின் சாபம். என சொல்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ‘கதை!.

அதுல்யா ரவியின் வாலிப வனப்பும், மல்லிகைப்பூக்களின் வாசமும் ஒரு சேர வீசும் வலையில் இருந்து தப்பிக்கும் சாந்தனுவின் நடிப்பு பரவாயில்லை. அதுல்யா ரவி நடிப்புடன் தனது இளமையினையும் விருந்து படைக்கிறார்.

கே.பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் இயக்குனர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றவும் செய்திருக்கிறார்கள்.

மயில்சாமியின் ‘சாமியார்’ காமெடி மட்டுமே ரசிக்க வைக்கிறது. குக்கூ.. குயில்சாமியாக வந்து சிரிக்க வைக்கிறார். மற்றபடி படத்தில் மனதை கவரும் விஷயங்களோ, காட்சிகளோ இல்லை.

ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும், தரண்குமாரின் இசையும் பரவாயில்லை!

பலவீனமான , சுவாரஷ்யமற்ற கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீஜர்.

முருங்கைக்காயில் சிப்ஸ் போடமுடியாது!