சாய் பல்லவியின் அப்பா ஆர் எஸ் சிவாஜியும் அவரது நண்பர் லிவிங்ஸ்டனும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை செய்கின்றனர். லிவிங்ஸ்டன் ஒரு நாள் குடித்துவிட்டு நிதானமிழக்கிறார். இதனால் அவரது வேலையையும் ஆர் எஸ் சிவாஜியே சேர்த்து செய்கிறார். அன்றைக்கு ஒரு சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் சின்னா பின்னப்படுத்துகிறது.
இதனால் போலீஸார் மர்மமான இடத்தில் வைத்து ஆர் எஸ் சிவாஜியை விசாரித்து வருகின்றனர். இந்த விஷயம் சாய் பல்லவிக்கு தெரிய வருகிறது. போலீஸார் வேண்டும் என்றே தனது அப்பாவை அந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாக நினைத்து சட்டத்தின் உதவியை நாடுகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் முழுக்கதையும்.
சிறுமியின் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது நமது மூச்சுக்குழாய்க்குள் கோலிக்குண்டுகள் உருள்வதைப்போன்ற உணர்வு. அவ்வளவு ரத்தம் ஓடும் காட்சிகள். ஸ்லோமோஷன் காட்சிகளை தவிர்ப்பதோடு, அதன் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.
மொத்தப்படத்தினையும் சாய் பல்லவி தனது பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் க்ளைமாக்ஸ் வரை எடுத்துச்செல்கிறார். கிடைத்த ஒவ்வொரு காட்சியிலும் அலட்டல் இல்லாத நடிப்பு. அவருக்கு பக்க துணையாக நடித்திருக்கும் காளிவெங்கட்டின் நடிப்பு அட்டகாசம். கோர்ட்டில் பல்லவியின் அப்பாவிற்கு ஆதரவாக வாதாடும் காட்சிகளின் எதார்த்ததை கண்முன்னே கொண்டு வருகிறார். இருவருக்குமே பாராட்டுக்கள் குவியும். இவர்களுக்கு விருதுகள் கொடுத்து பெருமை படுத்தினால், விருதுகளுக்கு கௌரவம்!
‘பருத்திவீரன்’ சரவணன் சில காட்சிகள் நடித்திருந்தாலும் அந்தக் காட்சிகளுக்கு ஜீவனாக இருக்கிறார். “என்னை அப்பாவாக பார்க்க வேண்டிய மக .. ஆம்பளையாகத்தான் பார்க்கிறா ” என அவர் குமுறுகிற போது எந்த அப்பன்தான் தாங்குவான்? சூறையாடப்பட்ட சிறுமியின் வலிகளை, அவளைக் காட்டாமலேயே இத்தகைய வசனங்கள் இடம்பெற்ற காட்சி, மிகவும் அழுத்தமான காட்சி.
திருநங்கை நீதிபதி என்பதால் ஏளனமுடன் வாதிடும் பப்ளிக் பிராசிகியூட்டர் கவிதாலய கிருஷ்ணனுக்கு அந்த நீதிபதி சொல்கிற பதில் தியேட்டரில் கைதட்டல்கள் பலமாக ஒலிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கோவிந்த் வசந்தாவின் இசை கதையின் நரம்பாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை அந்தந்த காட்சிக்கு தகுந்தாற்போல இசைக்கருவிகளை ஏந்தியிருக்கிறது.
படம் துவங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்பாக நகர்கிறது. க்ளைமாக்ஸில் போலீஸிடம் தப்பிக்கும் குற்றவாளி எதார்த்தமாக சாய் பல்லவியிடம் சிக்கிக்கொள்ளும் காட்சி பகீர்! இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் வழக்கமான இயக்குநர்களில் இருந்து மாறுபடுகிறார்.
சமூகத்திற்கு தேவையான இத்தகைய படங்களை தருகின்ற சூர்யா – ஜோதிகா அணியை பாராட்டவேண்டும்.
தமிழ்ச்சினிமாவின் முக்கியமான படம் என்பதால் அவசியம் பாருங்கள். இந்த சமூகம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது புரியும்.!